கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கு மாதம் ஒருநாள் ஊதியத்துடன்கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 52 வயது வரையிலான பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அம்மாநில அரசு கடந்த நவம்பர் 20-ம் தேதி உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாதவிடாய் விடுப்பு வழங்க நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட சட்டத்தில் அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
அரசின் அறிவிப்பாணையின் மூலமாக இந்த விடுமுறையை நடைமுறைப்படுத்த முடியாது. இந்த முடிவை அரசு அறிவிப்பதற்கு முன்பாக, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையினரிடம் அரசு ஆலோசனை நடத்தவில்லை” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை நேற்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜோதி தலைமையிலான அமர்வு, ‘‘மனுதாரரின் வாதத்தில் உள்ள சட்ட விளக்கங்களை ஏற்று, அரசின் மாதவிடாய் விடுப்பு தொடர்பான உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து கர்நாடக அரசு இரு வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வமான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கூறி, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.







