இன்றைய தலைமுறைக்குச் சொல்ல வேண்டிய கதை ‘கண்ணப்பா’: சரத்குமார்

0
268

மகாபாரதம் தொடரை இயக்கிய இந்தி இயக்குநர் முகேஷ் குமார் சிங், இயக்கியுள்ள படம், ‘கண்ணப்பா’. தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்சு, கண்ணப்பராக நடித்துள்ளார்.

சரத்குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு, மது, கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்‌ஷய்குமார் என பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா முறையில் வெளியாகியுள்ள இந்தப் படத்தைத் தமிழில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் ஜூன் 27-ம் தேதி வெளியிடுகிறது.

இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் சரத்குமார் கூறும்போது, ‘‘63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் இது. ஏற்கெனவே கன்னடத்தில் ராஜ்குமார், தெலுங்கில் கிருஷ்ணம் ராஜு இதே கதையில் நடித்திருக்கிறார்கள். இது விஷ்ணு மன்சுவின் பார்வையில் உருவாகி இருக்கிற கதை. சாதாரண வேடனாக இருந்த ஒருவன், எப்படி சிவபக்தன் ஆகிறான் என்று கதை செல்லும். தெய்வ நம்பிக்கை மற்றும் நம்பிக்கை இல்லாதவர்களின் போராட்டம் முதல் பாதியில் இருக்கும். நம்பிக்கை இல்லாத ஒருவர் சிவபக்தராக மாறுவதுதான் மையக்கரு.

இந்தப் படத்தின் சில காட்சிகளை 120 நாட்களுக்கு மேல் வெளிநாட்டில் படமாக்கி இருக்கிறார்கள். அது பெரிய விஷயம். இந்தப் படத்தின் பின்பகுதியில் வருகிற கடைசி ஒரு மணி நேரம் பிரம்மாண்டமாகவும் டெக்னிக்கலாகவும் சிறப்பாக இருக்கும். மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய, தெரிந்துகொள்ள வேண்டிய படமாக இது இருக்கும். சரித்திர, இதிகாசத்தில் இருக்கிற சில கதைகளை இப்போதிருக்கும் தலைமுறைக்கு நாம் சொல்ல மறந்துவிடுகிறோம். அதைச் சொல்லும் படமாக, இப்படி ஒரு சிவபக்தர் இருந்தாரா என்று கேட்கும் அளவுக்கு இந்தப் படம் இருக்கும்” என்றார்.

நடிகர் சம்பத்ராம், எடிட்டர் ஆண்டனி, சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here