கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக் கூடாது: சீமான், வேல்முருகன் வலியுறுத்தல்

0
143

கன்னட மொழி குறித்து பேசிய விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக்கூடாது என சீமான், தி.வேல்முருகன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

‘தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னட மொழி’ என்று மநீம கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கூறியது சர்ச்சையான நிலையில், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக்கோரி கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக நீதிமன்றமும், கமல்ஹாசன் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி இவ்விவகாரத்தில் மன்னிப்பு தான் தீர்வு என வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்ததாவது:

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கமல்ஹாசன் ஒரு வரலாற்று உண்மையை தான் சொல்கிறார். தமிழோடு சமஸ்கிருதம் கலந்து பேசி, பேசி அதிலிருந்து பிரிந்து பிறந்த மொழிகள் தான் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு உள்ளிட்ட மொழிகள். இப்போதும் கூட அக்கா, அம்மா போன்ற தூய தமிழ் சொற்கள் கன்னடத்தில் இருக்கின்றன. இதை ஏற்க மனமில்லை. கன்னடம் தமிழில் இருந்து வரவில்லை என்றால் அதற்கான அதிகாரப்பூர்வ சான்று காட்டினால் அனைவரும் அமைதியாகிவிட போகிறார்கள்.

அதைவிடுத்து, கமல்ஹாசன் நடித்த ‘தக்ஃலைப்’ படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது. இதை வேண்டுமென்றே தான் செய்கின்றனர். தமிழ், தமிழர் என்றாலே கர்நாடாகாவினருக்கு ஒரு வெறுப்பு. இவ்விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் என்ன செய்துவிடுவார்கள்? நீதிபதி மட்டும் என்ன மொழியியல் வல்லுநரா? எனவே கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக்கூடாது.

தவாக தலைவர் தி.வேல்முருகன்: கமல்ஹாசன் விவகாரத்தில் மொழி அரசியலாக பார்க்கப்படுகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், பாஜக மாநிலத் தலைவரும் தெரிவிக்கும் கருத்துக்கள் தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது.

அதேபோல் நீதிபதியாக இருப்பவரும் ஒரு கன்னடராக இருந்து மட்டுமே தீர்ப்பளித்துள்ளார். வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி கமல்ஹாசன் பேசியது சரியே. அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவேண்டும். ‘தக்ஃலைப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியாக தடைவிதித்தால், இனிவரும் காலங்களில் தமிழகத்தில் எந்தவொரும் கன்னட திரைப்படமும் வெளியாகாது.

விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்பி: கமல்ஹாசன் சொன்னது அரசியல் கூற்றல்ல. தமிழ்த்தாய் வாழ்த்தை நமக்குத் தந்த தமிழறிஞர் சுந்தரனாரின் கருத்தைத் தான் கமல்ஹாசன் கூறியுள்ளார். அனைத்துவிதமான வெறுப்பு அரசியலுக்கும் ஊற்றுக் கண்ணாகத் திகழும் பிற்போக்குவாதிகளின் சூழ்ச்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற சக்திகள் பலியாகிவிடக்கூடாது. இதில் விழிப்போடு இருந்து திராவிட ஒற்றுமையை கர்நாடக முதல்வர் காக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ‘தல்ஃலைப்’ படத்தை கர்நாடகவில் வெளியிட தடையிட்டால், பெங்களூர் நிறுவனம் தயாரித்து, நடிகர் விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படத்தை தமிழகத்தில் வெளியிட தடைக்கோருவோம் என சமூக வலைதளங்கில் நெட்டிசன்கள் பரப்பி வரும் செய்திகள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here