கன்னடம் குறித்த கருத்தை கமல்ஹாசன் தவிர்த்​திருக்க வேண்​டும்: நயினார் நாகேந்திரன்

0
232

பாமக உட்கட்சி விவகாரங்களுக்கும், ராமதாஸ்-அன்புமணி இடையேயான மோதலுக்கும், பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கு இடையிலான மோதலுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. பாஜகவுக்கும், பாமகவின் உட்கட்சிப் பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது முழுக்க முழுக்க அவர்களின் உட்கட்சி சார்ந்த பிரச்சனை. அதுகுறித்து கருத்து கூறவும் முடியாது.

அனைத்து மாநகராட்சிகளிலும் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவி வருகின்றன. நெல்லை மாநகராட்சியில் மட்டும் 200-க்கும் மேற்பட்டோர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

சேலம் மாநகராட்சியில் திமுகவை சேர்ந்தவர்கள், ஒரு கவுன்சிலரை அடிப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. ராணிப்பேட்டையில் 10-ம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து கொலை செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது.

தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஒரு மனிதனுக்கு தாய் மீது பற்று இருக்க வேண்டும். தாய்நாடு மீதும் பற்று இருக்க வேண்டும். ஒரு கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய கமல்ஹாசன், இதுபோன்ற கருத்தை தவிர்த்திருக்க வேண்டும். கன்னடத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு முதல்வரால் தனக்குப் பிரச்சினை வந்தது என்று கமல்ஹாசன் கூறியது தேவையில்லாத பேச்சு.

உத்தராகண்ட் மாநிலத்தில் 2 குட்டி யானைகள் உள்ளன. அவற்றில் ஒன்றை நெல்லையப்பர் கோயிலுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளனர். விதிமுறைகளைப் பின்பற்றி, முதல்வரிடம் பேசி யானை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here