எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா விரைவில் ராஜினாமா

0
168

எரிந்த நிலையில் பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா விரைவில் ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் யஷ்வந்த் வர்மா நீதிபதியாக பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் 14-ம் தேதி அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். அப்போது நீதிபதியின் வீட்டில் ஓர் அறையில் எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் கண்கெடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா, தீயணைப்புத் துறை மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவை சஞ்சீவ் கன்னா நியமித்தார்.

இந்த குழு தீவிர விசாரணை நடத்தி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவியை ராஜினாமா செய்ய தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். ஆனால் அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவர், பிரதமருக்கு தலைமை நீதிபதி கடிதம் அனுப்பினார். இதுகுறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் தற்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி யஷ்வந்த் வர்மா விரைவில் பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து சட்ட நிபுணர்கள் கூறியதாவது: ஒரு நீதிபதி தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்தால் அவருக்கான பணப் பலன்கள், ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும். நாடாளுமன்றம் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டால் எந்த பலனும் கிடைக்காது.

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தரப்பில் குடியரசுத் தலைவர், பிரதமரிடம் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. வரும் ஜூலை 21-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படலாம்.

இப்போதைய சூழலில் பதவியை ராஜினாமா செய்வது மட்டுமே நீதிபதி வர்மா முன்பிருக்கும் ஒரே வாய்ப்பு. அவர் விரைவில் குடியரசுத் தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு முன்பு உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுவாமி, கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சென் ஆகியோர் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டனர். நாடாளுமன்ற நடவடிக்கைக்கு முன்பாக இருவரும் பதவியை ராஜினாமா செய்தனர். இதே வழியை நீதிபதி யஷ்வந்த் வர்மாவும் பின்பற்றுவார். இவ்வாறு சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here