சமூக நலனுக்கான அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்: வழக்கறிஞர்களுக்கு நீதிபதி டீக்காராமன் அறிவுரை

0
199

வழக்கறிஞர்கள் சமூக நலனுக்காக அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் அறிவுரை வழங்கினார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் நாளை(ஜூன் 8) பணி ஓய்வு பெற இருக்கிறார். இதையொட்டி, அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் பிரிவுபசார விழா நேற்று நடைபெற்றது.

விழாவில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் பேசியதாவது: சீனாவில் ஆண்டுகளுக்கு பெயர் சூட்டுவதுண்டு. அதேபோல் 1963-ம் ஆண்டுக்கு நீதிபதிகள் ஆண்டு என்று தான் பெயர் சூட்ட வேண்டும். 1963-ம் ஆண்டில் பிறந்த 12 நீதிபதிகள் நடப்பாண்டு ஓய்வு பெறுகிறார்கள்.

கடந்த ஜனவரி முதல் இதுவரை 7 நீதிபதிகள் ஓய்வு பெற்று விட்டனர். இதன் மூலம் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கையில் 15 சதவீதத்தை இழந்திருக்கிறோம். அதனால் புதிய நீதிபதிகளை நியமிக்கும் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நீதிபதி டீக்காராமன், தன்னுடைய பதவி காலத்தில் 45 ஆயிரம் வழக்குகளை முடித்து வைத்திருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

நீதிபதி டீக்காராமன் ஏற்புரையில் பேசியதாவது: 20 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் கிருஷ்ணகிரியில் நீதிபதியாக பதவியேற்றேன். அதே நாளில் ஓய்வு பெறுகிறேன் என்ற வகையில் திருப்தியாக இருக்கிறது. மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஒரு பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்தேன்.

அப்போது 500 பேர் வேல் கம்புடன் நீதிமன்றத்துக்கு வெளியே திரண்டனர். என் பாதுகாப்புக்காக 14 போலீஸார் பணியமர்த்தப்பட்டனர். ஒரு கட்டத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணே நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதையடுத்து வழக்கு ரத்தானது. இதுவே நான் சந்தித்த விசித்திரமான வழக்கு.

அகில இந்திய அளவில் உயர் நீதிமன்றங்களில் நிரந்தர நீதிபதிகளாக உள்ள 865 நீதிபதிகளில் 108-வது இடத்தில் பதவி வகித்து ஓய்வு பெறுகிறேன். வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலுக்கும், சமுதாயத்துக்கும் அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நீதிபதி டிக்காராமன் பணி ஓய்வு பெறுவதை ஒட்டி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக குறைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here