14-வது ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் கடந்த மாதம் 28-ம் தேதி சென்னை மற்றும் மதுரையில் தொடங்கியது. 24 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் 7 முறை சாம்பியனான ஜெர்மனி, ஸ்பெயின் அணியுடன் மோதுகிறது. லீக் சுற்று மற்றும் நாக் அவுட் சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.
முன்னதாக மாலை 5.30 மணிக்கு நடைபெறும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா – அர்ஜெண்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2 முறை சாம்பியனான இந்திய அணி அரை இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணியிடம் 1-5 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்திருந்தது. அதேவேளையில் 2005 மற்றும் 2021-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் கைப்பற்றியிருந்த அர்ஜெண்டினா அணி அரை இறுதியில் 1-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியிடம் வீழ்ந்திருந்தது.
9 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி வெண்கலப் பதக்கத்துடன் தொடரை நிறைவு செய்வதில் முனைப்பு காட்டக்கூடும். ஜெர்மனி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் டிஃபன்ஸ் பலவீனமாக இருந்தது. இதனால் ஜெர்மனி அணி வீரர்கள் எளிதாக கோல்களை அடித்து கடும் அழுத்தம் கொடுத்திருந்தனர்.
மேலும் முன்கள வீரர்கள் எதிரணியின் பகுதிக்குள் பந்தை கொண்டு சென்ற போதெல்லாம் எளிதாக எதிரணியின் டிஃபன்டர்களிடம் பறிகொடுத்தனர். அத்துடன் பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் வீணடித்தனர்.
இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று பதக்க மேடையை அலங்கரிக்க வேண்டுமெனில் இந்திய அணி கடந்த ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.







