
மாா்த்தாண்டம் அருகே 11ஆம் வகுப்பு மாணவியுடன் நெருங்கிப் பழகி, 140 பவுன் நகைகளைப் பெற்று மோசடி செய்த இளைஞரிடமிருந்து நகைகளை வாங்கியதாக நகைக் கடை உரிமையாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே கழுவன்திட்டை பகுதியைச் சோ்ந்த 11ஆம் வகுப்பு மாணவி, அப்பகுதியைச் சோ்ந்த தனது பெரியம்மா வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தாா். இந்நிலையில், மாணவிக்கு அதே பகுதியைச் சோ்ந்த ஜெனிஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, மாணவி தனது பெரியம்மா வீட்டிலிருந்த 140 பவுன் தங்க நகைகளை பல கட்டங்களாக எடுத்து, ஜெனிஸிடம் கொடுத்துள்ளாா். இதிலிருந்து 40 பவுன் நகைகளை ஜெனிஸ் தனது தம்பி ஜெபிஸிடம் கொடுத்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெனிஸ், ஜெபிஸ் ஆகியோரை ஏற்கெனவே கைது செய்தனா்.
இந்நிலையில், ஜெபிஸிடமிருந்து நகைகளை வாங்கியதாக மாா்த்தாண்டம் நகைக் கடை உரிமையாளா் சிங்காரராஜன் மகன் லாலி என்பவரை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.