‘அஞ்சான்’ தோல்விக்கு பொறாமையும் ஒரு காரணம்: லிங்குசாமி பகிர்வு

0
66

‘அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு பொறாமையும் ஒரு காரணம் என்று இயக்குநர் லிங்குசாமி தெரிவித்தார்.

சூர்யா நடித்து, கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘அஞ்சான்’. லிங்குசாமி இயக்கியிருந்த இந்தப் படத்தைத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி சர்மா உள்பட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஹிட்டாகி இருந்தன. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் கடுமையான ட்ரோல் செய்யப்பட்ட படம் இதுவாகும்.

இந்த நிலையில் இப்படம் தற்போது மீண்டும் எடிட் செய்யப்பட்டு வெளியாகிறது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் இயக்குநர் லிங்குசாமி ஈடுபட்டுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் படத்தின் தோல்விக்கான காரணம் குறித்து பேசினார்.

அதில் அவர் கூறியதாவது: “படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. எங்கு திரும்பினாலும் ‘அஞ்சான்’, அஞ்சான்’ என்று சொல்லி சொல்லி அந்த எதிர்பார்ப்பு மிகவும் பெரிதாகி விட்டது. ஓவர் பில்டப் கொடுக்கிறார்களே என்ற கோபம் மக்களுக்கு ஏற்பட்டுவிட்டது. என்னுடைய ஒரு வார்த்தையை எடுத்து அனைவரும் ட்ரோல் செய்தனர். நான் அந்த வார்த்தையை படத்துக்காக சொல்லவில்லை. அந்த பேட்டிக்காகவே கூறினேன். அந்த காலகட்டத்தில் முதன்முறையாக இந்த ட்ரோல்களில் சிக்கியது நான்தான்.

தொடர் வெற்றியினால் ஏற்பட்ட பொறாமை கூட ஒரு காரணமாக இருக்கலாம். என்னுடைய திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த ’பையா’, ‘வேட்டை’, ‘வழக்கு எண் 18/9’, ‘கும்கி’ என அனைத்தும் படங்களும் வெற்றி. எப்படி இந்த வெற்றி சாத்தியம் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் இருந்தது.

‘அஞ்சான்’ படத்தின் முதல் பாதியையும் இரண்டாம் பாதியையும் சேர்த்து பார்க்க எனக்கு நேரம் கிட்டவில்லை. தேதியை முன்கூட்டியே வெளியிட்டுவிட்டதால் அது எனக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. எடிட் செய்து பார்க்கக் கூட நேரம் இல்லாமல் போய்விட்டது” இவ்வாறு லிங்குசாமி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here