கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் முழுநேர பயிற்சியாளராக முன்னாள் கேப்டனும் அதிரடி வீரருமான ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 2026-ம் ஆண்டு நடைபெறஉள்ள டி 20 உலகக் கோப்பை தொடர் வரை அவர், பயிற்சியாளராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயசூர்யா கடந்த ஜூலை மாதம் இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் இலங்கை அணி சிறந்த முடிவுகளை பெற்றது. இதைத் தொடர்ந்து ஜெயசூர்யாவை முழுநேர பயிற்சியாளராக நியமித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயசூர்யாவின் பயிற்சியின் கீழ் இலங்கை அணி27 வருடங்களுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை வென்றிருந்தது. இங்கிலாந்து மண்ணில் 10 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது.சமீபத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியிருந்தது.
ஜெயசூர்யாவின் முழுநேர பயிற்சியாளர் நியமனம் கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதலே அமலுக்கு வருவதாகவும், வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 31 வரை அவர், பதவியில் இருப்பார் எனவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஜெயசூர்யா கடந்த காலங்களில் தலைமை தேர்வாளராகவும் பணியாற்றி உள்ளார். முழுநேர தலைமை பயிற்சியாளராக அவரது முதல் பணி வரும் அக்டோபர் 13-ம் தேதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தம்புலாவில் நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இருந்து தொடங்குகிறது.