ஜஸ்பிரீத் பும்ரா நாட்​டின் பொக்கிஷம்: கேப்​டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டு

0
15

இந்​திய கிரிக்​கெட் அணி​யின் நட்​சத்​திர வேகப்​பந்து வீச்​சாள​ரான ஜஸ்பிரீத் பும்ரா நாட்​டின் பொக்கிஷம் என்று கேப்​டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டி உள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் நியூஸிலாந்து அணியை 96 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி, சூர்​யகு​மார் யாதவ் தலைமையி​லான இந்​திய அணி சாம்​பியன் பட்​டம் வென்றது.

இதன் மூலம் டி20 உலகக் கோப்​பையை 3-வது முறை​யாக வென்ற முதல் அணி என்ற சாதனையை​யும், சொந்த மண்ணில் கோப்​பையை வென்ற முதல் அணி என்ற சாதனையை​யும் இந்​திய அணி படைத்​தது. இந்​திய அணியின் வெற்​றிக்கு பேட்​டிங்​கில் சஞ்சு சாம்​சன் (89), அபிஷேக் சர்மா (52), இஷான் கிஷன் (54) ஆகியோர் சிறந்த பங்​களிப்பை வழங்​கி​யிருந்​தனர்.

இவர்​களது அதிரடி​யால் இந்​திய அணி 255 ரன்​களை குவித்திருந்​தது. இதே​போன்று பந்​து​வீச்​சில் ஜஸ்​பிரீத் பும்ரா 4 ஓவர்​களை வீசி 15 ரன்​களை மட்​டும் விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​யிருந்​தார். அவருக்கு உறு​துணை​யாக செயல்​பட்ட அக்​சர் படேல் 3 விக்கெட்களை கைப்​பற்​றி​யிருந்​தார்.

வெற்​றிக்கு பின்​னர் இந்​திய அணி​யின் கேப்​ட​னான சூர்யகு​மார் யாதவ் கூறிய​தாவது: ஜஸ்​பிரீத் பும்ரா, தலைமுறைக்கு ஒரு​முறை உரு​வாகும் அபூர்​வ​மான பந்துவீச்​சாளர். அவரை நமது நாட்​டின் பொக்​கிஷம் என்​று தான் கூற வேண்​டும். தனக்​குக் கொடுக்​கப்​பட்ட வேலையை எப்​படிச் செய்ய வேண்​டும் என்று அவருக்கு நன்​றாகத் தெரி​யும்.

வெற்றி உணர்​வில் இருந்து வெளியே வர எனக்கு சிறிது நேரம் ஆகும். ஆனால் நான் மிக​வும் மகிழ்ச்​சி​யாக உள்ளேன். இது ஒரு நீண்ட பயணம். 2024-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்​பைக்​குப் பிறகு தான் இது தொடங்​கியது. ஜெய் ஷா, ரோஹித் சர்மா ஆகியோர் என்னை நம்​பி, அணியை வழிநடத்த வாய்ப்பு கொடுத்​தார்​கள்.

அங்​கிருந்து இது ஒரு நீண்ட பயண​மாக இருந்​தது. தற்போது கோப்​பையை வென்​றது மிகுந்த மகிழ்ச்​சி​யாக உள்​ளது. கடந்த 2 ஆண்​டு​களாக நாங்​கள் சிறப்​பான கிரிக்கெட்டை விளை​யாடி வரு​கிறோம். 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்​பை​யில் நாங்​கள் பின்​பற்​றிய நல்ல விஷ​யங்​களைத் தொடர்ந்து கடைப்​பிடிக்க நினைத்​தோம். அதனை அணி வீரர்​கள் அனை​வரும் மிகச் சரி​யாகச் செய்தார்​கள் அணி​யில் உள்ள வீரர்​கள் என்ன திறன் கொண்​ட​வர்​கள் என்​ப​தைப் புரிந்​து​கொள்​வது மிக​வும் முக்கி​யம்.

அபிஷேக் சர்​மா​விட​மும், சஞ்சு சாம்​சனிடமும் போட்​டியை வெல்​லும் திறன் இருப்​பதை நான் அறிந்​திருந்​தேன். சரியான நேரத்​தில் அது நடந்​தது. சஞ்சு சாம்​சன், அபிஷேக் சர்மா ஆகிய இரு​வரும் மிகச் சிறந்த வீரர்​கள். அவர்​கள் ஏதாவது சிறப்​பாக செய்​வார்​கள் என்று நாங்​கள் நினைத்​திருந்​தோம். இறு​திப்​போட்​டி​யில் அவர்​கள் அதைச் செய்துகாட்டி உள்​ளனர்​. இவ்​வாறு சூர்​யகுமார் யாதவ் கூறினார்.

‘அடுத்த இலக்கு ஒலிம்பிக்கில் தங்கம்’

சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து கூறும்போது, “ஒரு அணியாக சேர்ந்து நாங்கள் சாதித்தது எல்லாம் உங்கள் முன்னால் இருக்கிறது. அதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயமாக அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டிதான். 2028-ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும். அதே ஆண்டில் டி 20 உலகக் கோப்பையும் நடைபெறுகிறது. அதையும் மறக்கக்கூடாது.

2024-ம் ஆண்டு முதல் நடைபெற்ற விஷயங்களை பார்த்தால் மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் நாங்கள் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. தொடர்ந்து மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளோம் (2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2025-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி).

கோப்பையை வெல்ல முடியாமல் நீண்ட காலமாக இருந்த வருத்தம் 2024-ல் முடிந்தது. அதற்குப் பிறகு நாங்கள் ஒருபோதும் பின்னோக்கி பார்க்கவில்லை. எப்படி விளையாட வேண்டும் என்று தெளிவு இருந்தது. 2024-க்குப் பிறகு எல்லாமே மாறிவிட்டது. 2025-ல் ரோஹித் ஷர்மா தலைமையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். அப்போது முற்றிலும் வேறுபட்ட வகையில் கிரிக்கெட்டை விளையாடினோம்.

இப்போது 2026-ல், சொந்த மண்ணில் ரசிகர்கள் முன்னிலையில் ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதனால் 2027, 2028, 2029-ம் ஆண்டிலும் இதையே தொடர்ந்து செய்ய வேண்டும். ஒருபோதும் நிறுத்தக் கூடாது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here