நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடின. இந்த ஆட்டம் சமனில் முடிந்த நிலையில், போட்டிக்கு பின் மைதானத்தை சுத்தம் செய்து பலரது நெஞ்சங்களை ஜப்பான் ரசிகர்கள் வென்றுள்ளனர்.
அவர்களது இந்த செயல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. போட்டி முடிந்த பிறகு மைதானங்களை சுத்தம் செய்யும் வழக்கத்தை ஜப்பான் ரசிகர்கள் தொடர்ந்து வருகின்றனர். கடந்த உலக கோப்பை கால்பந்து தொடர், அதற்கு முந்தைய 2018, 2014 தொடர் மற்றும் சர்வதேச விளையாட்டு தொடர்களில் ஜப்பான் ரசிகர்கள், பார்வையாளர் மாடத்தை சுத்தம் செய்துள்ளனர். இதன் செயல் மூலம் உலக மக்களின் நெஞ்சங்களை வெல்கின்றனர் இந்த ‘நீல சாமுராய்’ சமூகத்தினர்.
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஆர்லிங்டன் நகரில் அமைந்துள்ள டல்லாஸ் ஸ்டேடியத்தில் நெதர்லாந்து மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடின. நெதர்லாந்து இந்த முறை கோப்பை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஜப்பான் இந்த தொடரின் ‘டார்க் ஹார்ஸ்’ என கருதப்படுகிறது. இரு அணிகளும் வெற்றிக்காக முட்டி மோதின. இறுதியில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. கடந்த 2022 உலகக் கோப்பை தொடரில் ஜெர்மனியை ஜப்பான் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜப்பான் – நெதர்லாந்து ஆட்டத்துக்கு பிறகு டல்லாஸ் மைதானத்தின் பார்வையாளர் மாடத்தில் தங்கள் பிரிவில் (செக்ஷன்) குவிந்த குப்பைகளை ஜப்பான் ரசிகர்கள் அகற்றினர். அதன் வீடியோ மற்றும் படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
