தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெருங்களத்தூரில் ஜன. 29-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்: பழனிசாமி அறிவிப்பு

0
123

தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் பெருங்களத்தூரில் ஜன.29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாம்பரம் மாநகராட்சி, 5-வது மண்டலம் பெருங்களத்தூர் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிப்படி, பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்காரணை பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

அதிமுக ஆட்சியில் ரூ.14 கோடியில் சீரமைக்கப்பட்ட பீர்க்கன்காரணை ஏரி, திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஆகாயத் தாமரை செடிகளால் மூடப்பட்டு கழிவுநீர் குட்டையாக மாறி உள்ளது.

பெருங்களத்தூர் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடம், வணிக வளாகம், அங்கன்வாடி மையம் மற்றும் நாய்கள் கருத்தடை மையம் முதலானவை நீண்ட நாட்களாகியும் திறக்கப்படாமல் உள்ளன. பெருங்களத்தூரில் 15 பூங்காக்கள் பராமரிப்பின்றி, சமூக விரோதிகளின் மதுக்கூடங்களாக மாறி உள்ளன. இதனால், மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

பெருங்களத்தூர் முழுவதும் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. கழிவுநீர் கால்வாய்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை. மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் திமுக அரசு உள்ளது.

இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜன.29-ம் தேதி மாலை 4 மணிக்கு பெருங்களத்தூர், காமராஜர் நெடுஞ்சாலை, பெருமாள் கோயில் ரவுண்டானா அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கட்சியின் அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் தலைமையிலும்; செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகள். சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here