ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள டெல்லி – ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டம் டெல்லியில் நடைபெற்று வந்தது.
இதன் முதல் இன்னிங்ஸில் டெல்லி 211 ரன்களும், ஜம்மு & காஷ்மீர் அணி 310 ரன்களும் சேர்த்தன. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய டெல்லி அணி 69.1 ஓவர்களில் 277 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 179 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜம்மு & காஷ்மீர் அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 15 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்தது.
நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஜம்மு & காஷ்மீர் அணி 44.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. தொடக்க வீரரான கம் ரான் இக்பால் 147 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 20 பவுண்டரிகளுடன் 133 ரன்கள் விளாசினார்.
7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜம்மு & காஷ்மீர் அணிக்கு முழுமையாக 6 புள்ளிகள் கிடைத்தன. ரஞ்சி டிராபி கிரிக்கெட் வரலாற்றில் வலிமையான அணிக்கு எதிராக ஜம்மு & காஷ்மீர் அணி வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும். மேலும் 1960-ம் ஆண்டு முதல் ரஞ்சி கோப்பையில் டெல்லி – ஜம்மு & காஷ்மீர் அணிகள் 43 முறை நேருக்கு நேர் மோதியிருந்தன. இதில் 37 முறை டெல்லி அணியே வெற்றி பெற்றிருந்தது. 7 முறை சாம்பியனான டெல்லி அணி 65 வருட வரலாற்றில் முதன்முறையாக ரஞ்சி கோப்பை போட்டியில் ஜம்மு & காஷ்மீர் அணியிடம் தோல்வி அடைந்துள்ளது.














