‘நாயகன்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில், சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ஆர்.மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்ர். ரவி.கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூன் 5 வெளியாக உள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியானது. இதற்காக பத்திரிகையாளர் சந்திப்பை படக்குழு ஏற்பாடு செய்தது.
இதில கமல்ஹாசன் பேசியதாவது: “மணிக்கும் எனக்கும் இடையில் எதுவுமே மாறவில்லை என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். எல்டாம்ஸ் சாலையில் நாங்கள் முதல்முறை சந்தித்தபோது, மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு அதன் மீது அமர்ந்து, பேசிக் கொண்டிருப்போம். நாங்கள் பேசியதில் 25 சதவீத விஷயங்களை மட்டுமே செய்துள்ளோம். அதில் ஒன்று நாயகன், மற்றொன்று ‘தக் லைஃப்’. நாஙகள் செல்ல வேண்டிய தூரம் அதிகம். ஏனென்றால், எந்தப் படத்திலும் எங்கள் எல்லா கனவுகளையும் நனவாக்க முடியவில்லை. எதிர்காலத்தில் நாங்கள் செய்யும் படங்களில் அது நடக்கும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் மிகப் பெரிய கனவுகளைக் காண்கிறோம், ஆனால் நமது சந்தைக்கும் பட்ஜெட்டிற்கும் பொருந்தக்கூடிய வகையில் நாங்கள் கட்டுப்படுத்தப்படுகிறோம்.
இவ்வளவு காலம் நாங்கள் இணையாததற்கு தவறு எங்கள் மீதுதான். இப்போது நாங்கள் இணைந்ததற்கு காரணம் நீங்கள். ஒரு படம் வெற்றி பெறலாம். அல்லது தோல்வி அடையலாம். ஆனால் இறுதி தீர்ப்பு பார்வையாளர்களின் கையில்தான் உள்ளது.
மணிரத்னத்துக்கு நான் ‘ஐந்தரை மணிரத்னம்’ என்று பெயர் வைத்திருக்கிறேன். படப்பிடிப்புக்கு காலை 5.30 மணிக்கெல்லாம் வந்து உட்கார்ந்து விடுவார். இது ‘நாயகன்’ காலத்திலிருந்தே அவரிடம் இருக்கும் ஒரு பழக்கம். அதை பார்க்கும்போது எனக்கு பாலச்சந்தர் சாரின் நினைவு வருகிறது. படத்தில் நடித்த ஹீரோயின்கள் யாரும் எனக்கு ‘ஐ லவ் யூ’ சொல்லவில்லை. ஆனால் என்னை பார்க்கும்போதெல்லாம் ஐ லவ் யூ சொல்லும் ஒரே ஆள் ஜோஜு ஜார்ஜ் தான்.
எனக்கு சிம்புவுக்கு அவரது அப்பாவுக்கு ஒரு தொடர்பு உண்டு. டி.ஆர்-க்கு என்னை பிடிக்கும் என்று சொல்வதை விட என் மீது அளவு கடந்த பாசம். எனக்கு ஒன்று என்றால் என் நெஞ்சில் சாய்ந்து அழுது என் சட்டையை நனைத்து விடுவார். அவர் அந்த தலைமுறை. இவர் இளம் தலைமுறை எப்படி இருப்பாரோ என்று நினைத்தேன். ஆனால் பாசத்தில் தந்தை 8 அடி என்றால் இவர் 16 அடி இருக்கிறார். போட்டியும் பொறாமையும் நிறைந்த திரைத்துறையில் இப்படியெல்லாம் நட்பு கிடைப்பது கஷ்டம்” இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.