மதுபானம் விற்ற பணத்தில் அரசு இயங்குவது வெட்கக்கேடு என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சீமான் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: திமுகவும் அதிமுகவும் மாறி மாறி இங்கு ஆட்சி செய்கின்றன. ஆனாலும், டாஸ்மாக் மூடப்பட்டதா? கொலை கொள்ளை குறைந்துள்ளதா? ஆண்டிபட்டியில் திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பிகள். கடந்த முறை அண்ணனின் வெற்றிக்குத் தம்பி உதவினார். இம்முறை தம்பிக்கு அண்ணன் உதவுகிறார்.
இதுதான் ஜனநாயகமா? – தொகுதியில் ரூ. 30 கோடி செலவழிப்பவர்கள் மக்களுக்கு எப்படி நன்மை செய்வார்கள்? செலவழித்த தொகையை பல மடங்கு திரும்பப் பெறவே முயற்சி செய்வார்கள். மக்களுக்குப் பிரச்சினை தந்தவர்கள் ஒரு பக்கம், பிரச்சினையைத் தீர்ப்பவர்களான நாங்கள் ஒரு பக்கம். எங்கள் இருவருக்கும் இடையேதான் போட்டி.உங்கள் வீட்டில் திருடுவதற்கு முன்பு முன்பணம் வழங்குவது போல்தான் வாக்குக்குப் பணம் அளிப்பது. மலை இருந்தால்தான் மழை கிடைக்கும். தேனி மாவட்டத்தில் உள்ள பல மலைகள் குவாரியின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றன.
பணம் இருந்தால்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்றால் அன்றைக்கு கக்கன், காமராஜர் போன்ற தலைவர்கள் உருவாகி இருக்க முடியாது. டாஸ்மாக் வருமானத்தில் அரசு நடக்கிறது. மதுபானம் விற்ற பணத்தில் அரசு இயங்குவது வெட்கக் கேடு. இயற்கை அன்னையின் ரத்த நாளம்தான் ஆறுகள். ஆனால் வைகை ஆறு இன்றைக்கு கழிவுநீர் ஓடும் பகுதியாக மாறி விட்டது. நான் வெற்றி பெற்றால் இலவசத்துக்காக உங்களை கையேந்த விடமாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.
அவமானம் இல்லை: இதற்கிடையே சீமான் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘துண்டறிக்கை விநியோகம், வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவோருக்கு உணவு என அடிப்படை தேவைகளுக்கு நிதி தேவைப்படுகிறது. இதற்காக மக்களிடம் இருந்து திரள் நிதி பெறுகிறோம். இதை விமர்சிக்கிற கூட்டமும் இருக்கிறது. திருட்டு நிதியை விட திரள் நிதி எவ்வளவோ மேன்மையானது. என் மக்களிடம் கையேந்துவதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை’ என்று கூறியுள்ளார்.














