‘கம்பரின் படைப்புகள் மீதான ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும்’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். பாரதிய வித்யா பவன் சார்பில் ‘கல்விக் கூடங்களில் கம்பர்’ விருது வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, பள்ளி மற்றும் கல்லூரி அளவில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது: கம்ப ராமாயணம் உட்பட இதிகாசங்கள் நமது கலாச்சாரம், பண்பாடு போன்ற வாழ்வியல் முறைகளை எடுத்துரைக்கின்றன.
நம் நாட்டின் வடகிழக்கில் வசிக்கும் பழங்குடிகள் முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து தரப்பினரும் ராமரை ஏற்றுக் கொண்டுள்ளனர். அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்காக நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்து பொதுமக்கள் புனித நீர் மற்றும் மண்ணை அயோத்திக்கு அனுப்பி வைத்தனர். இதில் கிறிஸ்தவர், பழங்குடியினரும் அடங்குவர்.
அந்த வகையில் தமிழகத்தில் தேசிய விடுதலை உணர்வை உருவாக்கியதில் கம்பரின் படைப்புகளுக்கு முக்கிய பங்குள்ளது. ஆனால், மாநிலத்தில் அதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. பக்தி, அறிவியலுக்கு எதிரானது எனக்கூறி அவற்றை சிலர் அழிக்க முயல்கின்றனர்.
இந்தியில் துளசிதாசர் எழுதிய ‘ராமசரிதமானஸ்’ மீது ஆயிரக்கணக்கான முனைவர் பட்ட ஆய்வுகள் உள்ளன, ஆனால், தமிழில் கம்பர் எழுதிய ராமாயணம் மீது குறைந்த அளவிலே ஆய்வுகள் இருக்கின்றன. எனவே, கம்பரின் படைப்புகள் மீதான ஆய்வு, ஆராய்ச்சிகளை அதிகரிக்க வேண்டியது நமது கடமையாகும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் பாரதிய வித்யாபவன் சென்னை கேந்திராவின் தலைவர் ‘இந்து’ என்.ரவி, கமிட்டி உறுப்பினரும், செம்மொழி உயராய்வு மையத்தின் துணைத்தலைவருமான சுதா சேஷய்யன், சென்னை கேந்திராவின் இயக்குநர் கே.என்.ராமசாமி, துணை இயக்குநர் வெங்கடாச்சலம், பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் முதல்வர் பி.ஜி.சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பர் சிலையை ஆளுநர் ரவி திறந்து வைத்தார்.



