‘கோமாளி’, ‘பி.டி. சார்’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘சிங்கப்பூர் சலூன்’ உள்பட பல படங்களை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மூலம் தயாரித்து வருபவர், ஐசரி கே கணேஷ். இப்போது ‘மூக்குத்தி அம்மன் 2’, விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், ‘கட்டா குஸ்தி 2’, ‘டயங்கரம்’ உள்பட பல படங்களைத் தயாரித்து வருகிறார். இந்நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு ‘வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்’ என்ற நிறுவனத்தைத் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தொடங்கியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “இசையும் சினிமாவும் நம் கலாச்சாரத்தின் உயிர்நாடி. உலக இசைத்துறையில் நிகழும் மாற்றங்களுடன் நாமும் இணைந்து முன்னேற வேண்டும். தமிழ்த் திறமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் தளமாக இது இருக்கும். இது நாளைய இசையை உருவாக்கும் இயக்கம். தொழில்நுட்பம், திறமை, கதை சொல்லல் ஆகியவை ஒன்று சேரும் தென்னிந்தியாவின் படைப்பாற்றல் மையமாக ‘வேல்ஸ்’ உருவாகும். எனது பிறந்தநாளில் இந்நிறுவனத்தைத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் குமார், ஹிப் ஹாப் தமிழா ஆதி, சித்து குமார், கோவிந்த் வசந்தா, ஷான் ரோல்டன் ஆகிய இசையமைப்பாளர்களுடன் இணைந்து, புது தலைமுறை தமிழ் இசை திறமைகளை இந்நிறுவனம் உருவாக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.