‘சென்னையில் பிறந்த உங்கள் மனைவி சவுமியா தருமபுரியில் போட்டியிடலாம், சென்னையில் வசித்த நான் மயிலாடுதுறையில் போட்டியிடக் கூடாதா?’ என்று அன்புமணி ராமதாஸுக்கு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கும்பகோணத்தில் 23-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ‘இந்த தொகுதிக்கு சம்பந்தமில்லாத சென்னையிலிருந்து யாரோ ஒருவர், எங்கிருந்தோ வந்தார். தெரியாமல் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்தீர்கள்’ என்று பேசியதன் மூலம், தொடர்ந்து சமுதாய மக்களால் தோற்கடிக்கப்படுவதால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள விரக்தி, வயிற்றெரிச்சலை உணர முடிகிறது.
பெண் என்றும் பாராமல் பொது வெளியில் நக்கல், நையாண்டித்தனமாக பேசியதன் மூலம் நீங்கள் யார், பெண்களை எந்த அளவுக்கு நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். இதுதான் உங்களது பண்பும் கூட. சென்னையில் பிறந்து வளர்ந்த உங்கள் மனைவி சவுமியா அன்புமணி மற்றும் நீங்கள் தருமபுரியில் போட்டியிடலாம்.
சென்னையில் வசித்து இன்று மயிலாடுதுறையில் நிரந்தரமாகக் குடியேறிய நான், மயிலாடுதுறையில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் பெரும் குற்றமா? உங்கள் வீட்டுப் பெண்களுக்கு ஒரு நீதி, மற்ற பெண்களுக்கு ஒரு நீதியா? இதுதான் நீங்கள் கற்றுக்கொண்ட, கற்றுக் கொடுக்கும் சமூக நீதியா? சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா என்றால் அனைத்து வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் நன்கு தெரியும்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக 10 ஆண்டுகளாக இருந்து ஊடகங்களில் பேசி வருகிறேன். இத்தகைய என்னை யாரோ ஒருவர், எந்த ஊர் என்று தெரியவில்லை என்று பேசியிருப்பது ஒரு கட்சியை வழிநடத்தும் தலைமைப் பண்பை நீங்கள் பெறவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.














