“ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம்… ஒரு படி நிச்சயம்” என்று 1967-ல் அண்ணா சொன்னார். 1967 தேர்தலில் நடந்த மாற்றம் இந்தத் தேர்தலிலும் நடக்கப் போகிறது என்று சொல்லும் விஜய், “எல்லோருக்கும் நிரந்தரமான ஒரு வீடு… வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம், கார் என்பது லட்சியம்… அதற்கான வசதி வாய்ப்புகளை உருவாக்கும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை உண்டாக்கு வோம்” என்று அண்ணாவின் பூமியில் நின்று முழங்கியிருக்கிறார்.
இதன் மூலம் விஜய்யும் தனது தேர்தல் அறிக்கையில் கவர்ச்சி கரமான ‘இலவச’ அறிவிப்புகளை வெளியிட தயாராவதை உணரமுடிகிறது. இலவசங்கள் என்பது 1971-76ல் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்திலேயே தொடங்கி விட்டது. பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக தரம் உயர்த்திய எம்ஜிஆர், நோட்டுப் புத்தகங்களையும் இலவசமாக வழங்கினார்.
விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, பெண்களின் திருமண உதவி திட்டத்தில் தாலிக்கு தங்கம் சேர்த்தது, பணிக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் தந்தது, அம்மா உணவகங்களை திறந்தது, ரேஷனில் திமுக அரசு கிலோ 1 ரூபாய்க்கு தந்த அரிசியை, 20 கிலோ இலவசம் என்றாக்கியது என ஜெயலலலிதா ஆட்சியிலும் இலவசங்களுக்குப் பஞ்சமில்லை.
ஜெயலலிதாவுக்கு முன்பு கருணாநிதி ஆட்சியில் இலவசமாக வழங்கப்பட்ட ’கலைஞர் டிவி’ மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றியது. இன்னும் பல இலவசங்களும் திமுக ஆட்சியில் திகட்டத் திகட்டத் தரப்பட்டன. இப்போது ஸ்டாலின் ஆட்சியிலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை என இலவசங்கள் வரிசை கட்டுகின்றன.
திமுக-வையும் அதிமுக-வையும் விமர்சிக்கும் விஜய் அவர்கள் வழியிலேயே இலவசங்களை வழங்குவதற்கான பிரகடனத்தைச் செய்திருக்கிறார். தனது அரசியல் நாட்டத்தை தான் நடித்த படங்களில் ஆங்காங்கே விதைத்து வந்திருக்கும் விஜய், ‘சர்கார்’ படத்தில், இலவசங்களுக்கு எதிராக கொந்தளித்தார்.
மிக்சி, கிரைண்டர், டிவி உள்ளிட்ட அரசின் இலவசப் பொருட்களை மக்கள் ரோட்டில் போட்டு உடைப்பது போல் காட்சிகளையும் வைத்தார். இதைப் பார்த்துவிட்டு அவரது ரசிகர்கள் பலரும் இலவசப் பொருட்களை உண்மையாகவே ரோட்டில் போட்டு உடைத்து அதை வீடியோ எடுத்து வெளியிட்டதையும் பார்த்தோம்.
இப்படியான சூழலில் தான், காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், அனைவருக்கும் வீடு, வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம் என தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை கோடிட்டுக் காட்டினார்.
பெண்களும் இளைஞர்களும் தங்களுக்கு ஆதரவாக திரள்கிறார்கள் என்றதும் அவர்களை ஈர்க்கும் விதமாகவே இந்த இலவசங்களைப் பற்றி விஜய் பேசி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
தேர்தல் அறிக்கையில் இன்னும் விரிவான விளக்கங்கள் இருக்கும் என விஜய் சொல்லி இருப்பதன் மூலம் மக்களைக் கவரும் இலவச அறிவிப்புகளுக்கு பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது.
ஆக, என்னதான் வசனம் பேசினாலும் தமிழக மக்களை இலவசங்களால் மட்டுமே தன்வசப்படுத்த முடியும் என்பதை தாமதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார் விஜய். இது எந்த அளவுக்கு அவருக்குக் கைகொடுக்கிறது என்று பார்க்கலாம்.








