“அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்ட முதியவர்களின் முகாம் ஆகிறதா தவெக?” புலனாய்வு பத்திரிகை ஒன்றில் வாசகர் ஒருவர் இப்படியான கேள்வி ஒன்றைக் கேட்டிருந்தார். உண்மையில் தவெக-வை கட்டமைக்க விஜய்க்கு துணையாக வந்தவர்கள் இப்படியான முகாமைத்தான் இப்போது அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விசிக-விலிருந்து ஆதவ் அர்ஜுனா விஜய் கட்சிக்கு வந்தபோது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால், மிகக் குறுகிய காலத்திலேயே விசிக-வுக்கு வித்தியாசமான முகத்தைக் கொடுத்தவர் ஆதவ். ஆனால், விசிக-வில் இருந்த விசாலமான சுதந்திரம் அவருக்கு தவெக-வில் இல்லை. இதனால், பொதுச் செயலாளர் ஆனந்துக்கும் அவருக்குமே மனஸ்தாபங்கள் ஏற்பட்டன. அதேசமயம், வந்த வேகத்திலேயே தனது வழக்கமான செயல்பாடுகள் மூலம் தவெக தம்பிகள் மத்தியிலும் தனித்த இடத்தைப் பிடித்தார் ஆதவ். அதனால், போஸ்டர்களிலும் ஃபிளெக்ஸ்களிலும் அவருக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். இதை ஆனந்த் தரப்பு ரசிக்கவில்லை.
இதற்கிடையில், நிர்மல் குமார், அருண்ராஜ், செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத், ஜே.சி.டி.பிரபாகர் என வரிசையாகக் கட்சிக்குள் வந்தார்கள். இவர்களில் செங்கோட்டையனை தவிர மற்ற யாருக்கும் தனிப்பட்ட முறையில் தவெக-வுக்கு செல்வாக்கு சேர்க்கும் சக்தி இல்லை. அதனால், மற்ற கட்சிகளில் இருக்கும் முக்கிய தலைகளை தங்கள் முயற்சியால் தவெக-வுக்கு இழுக்கும் வேலைகளில் இவர்கள் இறங்கினார்கள். ஆனால், இவர்கள் எதிர்பார்த்தபடி முக்கிய தலைகள் யாரும் இதுவரை வந்தபாடில்லை.
இதனால், ‘யார் வந்தாலும் இழுத்துப் போடு’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். அதன்படியே ஆளாளுக்கு களத்தில் இறங்கி ஆள்பிடிக்கும் வேலைகளை இப்போது பார்த்துக் கொண்டிருக் கிறார்கள். இவர்களால் அழைத்து வரப்படும் நபர்கள் அனைவருமே மற்ற கட்சிகளில் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டவர்களும் விலக்கி வைக்கப்பட்டவர்களாகவுமே இருக்கிறார்கள். புரியும்படியாகச் சொல்வதானால், மற்ற கட்சிகளில் ‘எக்ஸ்ட்ரா லக்கேஜ்’ என முத்திரை குத்தப்பட்டவர்களை மட்டுமே இவர்களால் இழுக்க முடிகிறது. ஆனாலும், “முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏ-க்கள் வரப்போகிறார்கள்” என்று பில்டப் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆதவ் அர்ஜுனா ஒருபடி மேலே போய், “இரண்டு அமைச்சர்களே எங்கள் பக்கம் வரப்போகிறார்கள்” என்று அள்ளிவிட்டிருக்கிறார். ஆனால், இதுவரை அப்படி யாரும் வந்தபாடில்லை.
“234 தொகுதிகளிலும் இந்த விஜய் தான் வேட்பாளர்” என விஜய் சொல்லி இருந்தாலும் அவரைப் போல அரசியல் சுத்தமானவர் களும் மெத்தப் பணக்காரர்களும் தவெக-வுக்கு இன்னும் சிக்கவில்லை. தவெக தளபதிகள் அப்படியானவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நெருக்கத்தில் மற்ற கட்சிகளில் வாய்ப்பு மறுக்கப்படும் ‘பக்கா’ அரசியல்வாதிகள் பலரும் பனையூர் பக்கம் படை திரட்டுவார்கள். அவர்களையும் தங்களின் ‘வளைப்பு’ பட்டியலில் ஏற்றி தலைவரிடம் சபாஷ் பெறுவார்கள் இழுப்புத் தளபதிகள்.
ஏற்கெனவே, விஜய்க்காக முப்பதாண்டு காலம் போஸ்டர் ஒட்டி புகழ்சேர்த்த அவரது மன்றத்துப் பிள்ளைகள், கட்சிக்குள் அரசியல்வாதிகளின் ஊடுருவலால் பொருமிக் கொண்டிருக்கிறார்கள். மன்றத்தில் ஹீரோவாக இருந்த தங்களை எங்கிருந்தோ வந்திறங்கும் அரசியல்வாதிகள் ஜீரோ ஆக்குவதை அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.
அதேசமயம், நேர்மையான அரசியலை தரப்போவதாகச் சொல்லும் விஜய்யின் தவெக, அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளின் சங்கமத்தால் தனது தனித்த அடையாளத்தை இழந்து சராசரி அரசியல் கட்சியாக கொஞ்சம் கொஞ்சமாக கலர் மாறிக்கொண்டிருக்கிறது. இப்படி இருந்தால் மாற்றத்துக்கான அரசியல் எங்கிருந்து வரும் ப்ரோ?



