இந்த சீசனின் மிக நியாயமற்ற ஒரு வெளியேற்றம் இந்த வாரம் நடந்தேறியுள்ளது. முதல் வாரத்தில் இருந்து எதுவுமே செய்யாமல் ‘மிக்சர்’ மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் உள்ளே இருக்க, டாஸ்க்குகளில் சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து கொடுத்து வந்த பிரவீன் இந்த வாரம் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
வைல்டு கார்டு என்ட்ரிக்குப் பிறகு இந்த வாரம் கூடுதல் சுவாரஸ்யத்துடன் இருந்தது. அதற்கு காரணம் பழைய போட்டியாளர்களை ‘கெஸ்ட்’ ஆக வரவழைத்து நடத்தப்பட்ட ‘ஆஹோ ஓஹோ ஹோட்டல் டாஸ்க்’. குறிப்பாக முந்தைய சீசன்களின் வெற்றியையும், இந்த சீசனின் தடுமாற்றத்தையும் பிக்பாஸே குறியீடாக சொல்லியிருப்பது நேர்மையாக இருந்தது. பிக்பாஸ் டீம் செய்த இன்னொரு நல்ல விஷயம், சாண்ட்ராவிடம் சீக்ரட் டாஸ்க்கை ஒப்படைத்தது. அதை அவரும் மிக திறமையாக செய்து முடித்தது இந்த வாரத்தை மேலும் சுவாரஸ்யமாக்கியது.
ஒருவரை வேலையை விட்டு போக செய்ய வேண்டும். வேறு ஒருவரின் பதவியை மாற்ற வேண்டும் என்ற இரண்டு டாஸ்க்குகளை பிக்பாஸ் சாண்ட்ராவிடம் கொடுத்திருந்தார். ஆனால் அவரே எதிர்பார்க்காத வகையில் மூன்று டாஸ்க்குகளை செய்து முடித்தார் சாண்ட்ரா. வார இறுதியில் முதல்முறையாக விஜய் சேதுபதி குறும்படம் போட்டுக் காட்டியபோது போட்டியாளர்கள் வாயடைத்து போய்விட்டனர். குறிப்பாக விக்கல்ஸ் விக்ரமால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. காரணம், மிகுந்த விரக்தியுடன் அவர் தன் பதவியை ராஜினாமா செய்து அழுதிருந்தார்.
இந்த வாரம் ஆச்சர்யப்படுத்திய மற்றொரு போட்டியாளர் பார்வதி. வழக்கமாக எந்த டாஸ்க்கிலும் ஒத்துழைக்காமல் வாக்குவாதங்களில் ஈடுபடும் அவர் இந்த வாரம் அவரா இவர் என்று வியக்கும் அளவுக்கு அமைதியாக ஹோட்டல் டாஸ்க்கை செய்துமுடித்தார். அதற்கு பலனாக அவரை போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து பெஸ்ட் பெர்ஃபார்மர் ஆக தேர்வு செய்ததும் நடந்தது.
கூட்டம் ஓவராக இருப்பதாலோ என்னவோ இந்த வாரம் இரண்டு எவிக்ஷன்கள் நடத்தப்பட்டன. சனிக்கிழமை எபிசோடில் துஷார் வெளியேற்றப்பட்டார். இத்தனை வாரங்களாக ஆடியன்ஸ் போல இருந்தவர் இந்த வாரம்தான் கொஞ்சமேனும் தனக்காக குரல் கொடுக்கத் தொடங்கியிருந்தார். ஆனால் மிகவும் தாமதமான முயற்சி.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் பிரவீன் வெளியேற்றப்பட்டது நியாயமற்ற ஒன்று. உண்மையில் வாக்குகள் அடிப்படையில்தான் இந்த எவிக்ஷன் நடைபெற்றதா என்ற சந்தேகம் எழாமல் இல்லை. காரணம் ஆரோரா, ரம்யா போன்று வெறுமனே மிக்சர் சாப்பிடுவது போல எதுவும் செய்யாமல் இருப்பவர்கள் எல்லாம் நாமினேஷனுக்கே கூட வராமல் தப்பித்துக் கொண்டிருக்கும் சூழலில் தொடர்ந்து டாஸ்க்குகளில் நல்ல பங்களிப்பை தந்த ஒருவர் வெளியேற்றப்பட்டது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.
இந்த அதிர்ச்சியை போட்டியாளர்களால் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதுவரை நடந்த எவிக்ஷனிலேயே இந்த முறை அதிகம் பேர் உடைந்து விட்டனர். பிரவீனும் தன்னுடைய கனவு நொறுங்கியதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கதறி அழுதது உருக்கமாக இருந்தது.
அதற்கு காரணமும் உண்டு. நாமினேஷனின் போது நியாயமான முறையில் அல்லாமல் அனைவரும் பேசி வைத்தது போல பார்வதி அல்லது கம்ருதீன் போன்ற ஆட்களையே டார்கெட் செய்து நாமினேட் செய்கின்றனர். இதனால் மிக்சர் பார்ட்டிகள் நாமினேஷனுக்குள்ளேயே வராமல் எஸ்கேப் ஆகிவிடுகின்றனர். பிரவீன் போன்ற நல்ல போட்டியாளர்கள் வெளியேறிவிடுகின்றனர். இதனை விஜய் சேதுபதியும் இந்த வாரம் குறிப்பிட்டு சொன்னார். இதனை போட்டியாளர்கள் உணர்ந்து நியாயமான முறையில் நாமினேட் செய்கிறார்களா என்பதை வரும் வாரங்களில் பார்க்கலாம்.














