Home மாநில செய்திகள் பழனிசாமியை எதிர்த்து செல்வகணபதியை நிறுத்துகிறதா திமுக? – சிவலிங்கத்தை ராஜ்யசபாவுக்கு அனுப்புவதன் பின்னணி

பழனிசாமியை எதிர்த்து செல்வகணபதியை நிறுத்துகிறதா திமுக? – சிவலிங்கத்தை ராஜ்யசபாவுக்கு அனுப்புவதன் பின்னணி

0

ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலில் திமுக மும்மதத்துக்கும் இடமளித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், சேலம் எஸ்.ஆர்.சிவலிங்கத்தை வேட்பாளராக்கியதில் திமுக-வுக்கு வேறொரு முக்கிய கணக்கும் இருக்கிறது என்கிறார்கள்.

சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரான எஸ்.ஆர்.சிவலிங்கம் கடந்த மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியை தலைமை தனக்கு ஒதுக்கும் என எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை என்றதும் சற்றே அப்செட் ஆனவர், கட்சி நவடிக்கைகளில்கூட பிடிப்பில்லாமல் தான் இருந்தார். அப்படி இருந்தவரை ராஜ்யசபா வேட்பாளராக அறிவித்து உற்சாகப்படுத்தி இருக்கிறது திமுக தலைமை.

2021-ல் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் எப்படி அதிமுக அள்ளியதோ அப்படித் தான் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை அதிமுக கூட்டணி வாரிச் சுருட்டியது. எஞ்சிய ஒரே ஒரு தொகுதியான சேலம் வடக்கில் மட்டும் தான் திமுக ஜெயிக்க முடிந்தது. அதனால் அமைச்சரவையிலும் சேலத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய், பொறுப்பு அமைச்சரைப் போட்டு கட்சியைக் கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதேசமயம், சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பை இழந்தாலும் மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியது திமுக. இதனைத் தொடர்ந்து அண்மையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது மாவட்டத்தின் ஒரே எம்எல்ஏ-வான பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு அமைச்சராகும் யோகமும் அடித்தது.

கட்சி ரீதியாக சேலம் மாவட்ட திமுக மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளராக எஸ்.ஆர்.சிவலிங்கமும் மேற்கு மாவட்டச் செயலாளராக எம்பி-யான செல்வகணபதியும் இருக்கிறார்கள். மத்திய மாவட்டத்துக்கு அமைச்சர் ராஜேந்திரன் தான் செயலாளர். இந்த மூவருக்குமே ஒன்றுபட்ட சேலம் மாவட்டம் முழுமைக்குமே செல்வாக்கு இருக்கிறது. இதில், அரசு பதவி இல்லாமல் இருந்தது சிவலிங்கம் மட்டும் தான். இதை மனதில் வைத்தும் அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்ப முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர், “எம்ஜிஆர் காலம் தொட்டே இந்த மாவட்டம் அதிமுக-வுக்கு சாதகமான ஒன்றாக இருக்கிறது. இப்போது எடப்பாடி பழனிசாமியும் இந்த மாவட்டத்துக்காரராக இருப்பதால் இன்னும் கூடுதலாகத்தான் இருக்கிறது செல்வாக்கு. சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கும் தனது தோஸ்த் இளங்கோவன் மூலமாக புறநகரில் அதிமுக-வை துடிப்போடு வைத்திருக்கிறார் பழனிசாமி. அதுபோன்றதொரு கட்டுக்கோப்பை உருவாக்க நினைக்கிறது திமுக தலைமை.

சேலம் திமுக-வை இன்னும் பல மாவட்டங்களாக பிரித்து புதியவர்களுக்கு பொறுப்பைக் கொடுத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என திட்டமிடுகிறது தலைமை. ஆனால், தேர்தல் நெருங்கிவிட்டதால் இப்போதைக்கு அது சாத்திய மில்லை என்பதால், ஏற்கெனவே இருப்பவர்களுக்கு அந்தஸ்தைக் கொடுத்து அதன் மூலம் கட்சியை பலப்படுத்துகிறார்கள். பனமரத்துப்பட்டி ராஜேந்திரனை அமைச்சராக்கியது கூட அப்படித்தான்.

சிவலிங்கத்தை ராஜ்யசபாவுக்கு அனுப்புவதன் பின்னணியில் இன்னொரு தகவலும் சொல்கிறார்கள். இந்தத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான போட்டியைக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறது தலைமை. அறிமுகம் இல்லாத ஆட்களை நிறுத்தினால் அது சாத்தியமாகாது என்பதால் செல்வகணபதியை அவருக்கு எதிராக நிறுத்த தலைமை திட்டமிடுவதாகச் சொல்கிறார்கள். முன்னாள் அதிமுக காரர் என்பதால் பழனிசாமிக்கு எதிராக அவரை நிறுத்தினால் அதிமுக விசுவாசிகளும் அவருக்கு ஓட்டுப்போடலாம்.

அதுமாத்திரமில்லாது… செல்வகணபதியை நிறுத்தி போட்டியை பலமாக்கினால் பழனிசாமியை வேறெங்கும் செல்ல முடியாதபடிக்கு சேலத்துக்குள்ளேயே முடக்கிவிடலாம். அதிமுக வரவான செல்வகணபதிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கொடுப்பதால் அப்செட் ஆகிவிடக்கூடாது என்பதால்கூட சிவலிங்கத்தை அவர் எதிர்பார்க்காத நேரத்தில் ராஜ்யசபாவுக்கு அனுப்ப தலைமை முடிவெடுத்திருக்கலாம்” என்கிறார்கள். ஒரு காலத்தில் வீரபாண்டியர் என்ற ஒற்றை மனிதரின் கட்டுப்பாட்டில் எஃகு கோட்டையாக இருந்த சேலம் திமுக-வை தூக்கி நிறுத்த இப்போது என்னவெல்லாம் செய்யவேண்டி இருக்கிறது!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version