ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மனைவி சாந்தி. இவர் நேற்று முன்தினம் தனது பர்சில் 12 கிராம் தங்க நகை எடுத்துக்கொண்டு வில்லுக்குறிச்சி வந்துவிட்டு, திரும்பி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது கையில் இருந்த மணிப் பர்ஸ் தவறிவிட்டது. அவர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சாந்தி ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். இந்நிலையில் இரணியல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற ஆட்டோ டிரைவர் தனது ஆட்டோவில் ஆளூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் ஒரு மணிப் பர்ஸ் கிடந்ததைக் கண்டெடுத்து, அதில் நகை இருப்பதைக் கண்டு அவர் பர்சை நகையுடன் இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸ் நடத்திய விசாரணையில் அது சாந்தியின் பர்ஸ் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அடையாளங்களைக் கேட்டுச் சரிபார்த்த பின் போலீசார் நகையுடன் பர்சை நேற்று ஒப்படைத்தனர். நகையை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் பாராட்டப்பட்டார்.














