இரணியல் அருகே காற்றாடி மூடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரலிங்கம் (55). நாகர்கோவில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி குருந்தன்கோடு பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினரின் மகள் கோட்டாறு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவதினம் சுந்தரலிங்கம் வீட்டில் பீரோவில் இருந்த சுமார் 11 பவுன் தங்க நகைகள் திடீரென மாயமானது. இது குறித்து அவர் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் பக்கத்து வீட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.