எங்கள் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் ஹார்முஸ் ஜலசந்தியை அடுத்த இரண்டே நாட்களில் மீண்டும் திறக்கத் தயார் என ஈரான் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் கூறியதாவது: அமெரிக்காவுடன் மத்தியஸ்தர்கள் வழியாக சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. போர் பதற்றத்தைத் தணிக்க முதன்மை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் ஈரானின் எண்ணெய் துறை மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதோடு, வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளை உடனே விடுவிக்க வேண்டும்.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க கடற்படை முற்றுகையைக் கைவிட வேண்டும். பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும், ஓமன் நாட்டின் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய போக்குவரத்து வழித்தடத்தை அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும். இதுபோன்ற மிக முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். இவற்றை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் 2 நாட்களுக்குள் ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரான் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
