இரையுமன்துறை அருகே பூத்துறை மீனவர் கிராமத்திற்கும் ஊர் எல்லை உறுதிப்படுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் தூண்டில் வளைவு பணிக்கு பாறாங்கல் கொண்டு செல்லவும் ஊர் மக்கள் தடை செய்திருந்தனர்.
இரு சம்பவங்கள் குறித்து கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் தலைமையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டருக்கு புகார் செய்யப்பட்டது. நேற்று (16-ம் தேதி) மாவட்ட கலெக்டர் அழகு மீனா சம்பவ இடத்தை வந்து பார்வையிட்டார். அப்போது பூத்துறை மீனவ கிராமத்தின் வழியாக தூண்டில் நுழைவு பணிக்கு பாறாங்கல் கொண்டு செல்லும் சாலையில் கலெக்டர் அதிகாரியுடன் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்பந்ததாரர்களை அழைத்து மேடு பள்ளமாக காணப்படும் சாலையை உடனே சீரமைக்க உத்தரவிட்டார். பின்னர் எல்லைக்கல் இடத்தை பார்வையிட்டு கிள்ளியூர் தாசில்தாரிடம் எல்லைக்கல் போடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதைத் தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்படி பூத்துறை மீனவ கிராமத்தை பிரிக்கும் வகையில் ஏற்கனவே இருந்த இடத்தில் எல்லைக்கல் நடப்பட்டது.














