ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி முதல் மே 31 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வந்தது.
இதற்கிடையே 19-வது சீசனுக்கான ஐபிஎல் போட்டி அட்டவணை 12-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு முதற்கட்ட போட்டி அட்டவணை வெளியானது. இதில் மார்ச் 28 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெறும் 20 ஆட்டங்கள் மட்டும் இடம் பெற்றுள்ளன. சட்டப் பேரவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதும் முழு போட்டி அட்டவணையும் வெளியிடப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 19-வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் வரும் 28-ம் தேதி நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி), 2016-ம் ஆண்டு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ள 20 ஆட்டங்களும் பெங்களூரு, மும்பை, குவாஹாட்டி, நியூ சண்டிகர், லக்னோ, கொல்கத்தா, சென்னை, டெல்லி, அகமதாபாத், ஹைதராபாத் ஆகிய 10 நகரங்களில் நடைபெறுகிறது. முதற்கட்ட அட்டவணையில் ஒவ்வொரு அணியும் 4 ஆட்டங்களில் விளையாடுகின்றன.
முதற்கட்ட போட்டி அட்டவணையில் ஒரே நாளில் 2 போட்டிகள் நடத்தப்படும் டபுள்-ஹெட்டர்ஸ் 4 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில் பிற்பகல் 3.30 மணிக்கு ஒரு ஆட்டமும், இரவு 7.30 மணிக்கு மற்றொரு ஆட்டமும் நடைபெறும். மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 29-ம் தேதி வான்கடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
5 முறை சாம்பியான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி தனது முதல் ஆட்டத்தில் 2008-ம் ஆண்டு சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் குவாஹாட்டியில் நடைபெறுகிறது. சிஎஸ்கே அணி தனது 2-வது ஆட்டத்தில் ஏப்ரல் 3-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
சிஎஸ்கே தனது 3-வது ஆட்டத்தில் ஆர்சிபி அணியுடன் பெங்களூருவில் ஏப்ரல் 5-ம் தேதி பலப்பரீட்சை நடத்துகிறது. இதன் பின்னர் அடுத்த ஆட்டத்தில் சிஎஸ்கே ஏப்ரல் 11-ம் தேதி சேப்பாக்கத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை சந்திக்கிறது. முதல் டபுள் ஹெட்டர் போட்டி ஏப்ரல் 4-ம் தேதி நடைபெறுகிறது.
இதில் பிற்பகல் 3.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன.
மேற்கு ஆசிய போரால் பாதிப்பு?
பிசிசிஐ அதிகாரிகளின் கவனத்தில் தற்போது மாநிலத் தேர்தல்களைத் தவிர, மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழலும் ஒரு முக்கிய கவலையாக உள்ளது. ஏனெனில் இந்த போர் சர்வதேச விமானப் போக்குவரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாக தோஹா மற்றும் துபாய் போன்ற முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகள் பெருமளவு முடக்கப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்து ஒரு வாரம் ஆகியும், தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளைச் சேர்ந்த சில வீரர்கள் இன்னும் தங்கள் நாடுகளுக்குச் சென்றடையவில்லை. இதேபோல், இந்த இரண்டு நாடுகளையும் சேர்ந்த ஐபிஎல் வீரர்கள், தங்களது அணிகளுடன் சரியான நேரத்தில் இணைவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதுதொடர்பாக ஐபிஎல் அணியை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர்களின் பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்களை மீண்டும் சரியான நேரத்தில் இந்தியாவுக்கு அழைத்து வருவது கடினமான காரியம். அதோடு, மேற்காசியப் போர் காரணமாக விமானக் கட்டணங்களும் கணிசமாக உயர்ந்துள்ளன” என்றார்.
சிக்கலில் பெங்களூரு போட்டி
பெங்களூருவில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகள், கர்நாடக அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டவை என பிசிசிஐ அறிவித்துள்ளது. நிபுணர் குழுவினர் நாளை (13-ம் தேதி) சின்னசாமி மைதானத்தில் ஆய்வு நடத்த உள்ளனர்.
அப்போது, ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான மைதானத்தின் தயார்நிலையை மதிப்பீடு செய்ய, போட்டி நடைபெறும் நாளன்று செய்யப்படும் அனைத்து ஏற்பாடுகளும் ஒரு முழு அளவிலான ஒத்திகை மூலம் செய்து காட்டப்படும். இதில் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் திருப்தி அடைந்தால் மட்டுமே ஐபிஎல் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் நடத்த அனுமதி வழங்கப்படும்.














