தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் 2026 மற்றும் டிரையத்லான் சென்னை – 2026 போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து துணை முதல் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: சர்வதேச இளையோர் பாய்மர படகுப் போட்டி சாம்பியன்ஷிப் 2026 போட்டியையொட்டி, சென்னையில் ஜன.6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை பல்வேறு வகையிலான படகுப்போட்டிகள், பாய்மரப் பலகை சறுக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இப்போட்டிகளில் இந்தியா, அயர்லாந்து, சீசெல்ஸ், மொரீசியஸ், ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அல்ஜீரியா, இலங்கை, மலேசியா, தைவான், ஸ்வீடன், ரஷ்யா மற்றும் இங்கிலாந்து ஆகிய 13 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இதுவரை பாய்மரப் படகுப்போட்டிகளை தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்து ரசித்த சென்னை மக்களுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் இந்த போட்டி நீங்காத நினைவுகளை அளிக்கும்.
அதேபோல், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் டிரையத்லான் சென்னை – 2026 போட்டியையொட்டி 1.50 கி.மீ நீச்சல், 40 கி.மீ சைக்கிளிங், 10 கி.மீ ஓட்டம் என மொத்தம் 51.50 கி.மீ தூரம் கொண்ட இரும்பு மனிதன் டிரையத்லான் சென்னை போட்டி ஜன.10 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிகளில் 1,200-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்கள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். இந்த இரண்டு போட்டிகளையும் சிறப்பாக நடத்தும் வகையில் போக்குவரத்து, பாதுகாப்பு, அவசர மருத்துவ சேவைகள், தங்குமிட வசதி, வீரர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







