‘ஜனநாயகன்’ படத்தை வெளியிட இடைக்கால தடை – உயர் நீதிமன்ற உத்தரவும், படக்குழு முடிவும்

0
31

தவெக தலை​வ​ரான நடிகர் விஜய் நடித்​துள்ள கடைசிப் ​படம் ‘ஜனநாயகன்’. கேவிஎன் புரொடக்க் ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஹெச்​.​வினோத் இயக்கியுள்ளார். இதை ஜன.9-ம் தேதியான நேற்று உலகம் முழு​வதும் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

இந்​நிலை​யில், இப்​படத்​துக்கு தணிக்கை சான்​றிதழ் வழங்க மறுத்த மத்​திய தணிக்கை வாரி​யம், படத்தை மறுஆய்​வுக்கு அனுப்​பியது. இதை எதிர்த்து படத்​த​யாரிப்பு தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்​பு, கடந்த 7-ம் தேதி விசாரணைக்கு வந்​தது.

அப்​போது மத்​திய தணிக்கை வாரி​யம் தரப்​பில் கூடு​தல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி வாதாடினார். படத்​ த​யாரிப்பு நிறு​வனம் தரப்​பி்ல் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் மற்​றும் வழக்​கறிஞர் விஜயன் சுப்ரமணி​யன் ஆகியோர் ஆஜராகி வாதடினர்.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி பி.டி.ஆஷா இந்த வழக்கில் நேற்று அளித்த தீர்ப்​பில், ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்​பிய தணிக்கை வாரியத்தின் உத்​தர​வில் உள்​நோக்​கம் இருப்​ப​தாகத் தெரிகிறது என்​ப​தால் அந்த உத்​தரவை ரத்து செய்​கிறேன். எனவே படத்தை வெளி​யிட ஏது​வாக உடனடி​யாக ‘யு/ஏ’ சான்​றிதழ் வழங்க வேண்​டுமென தணிக்கை வாரியத்துக்கு உத்தர​விட்​டார்.

அந்த தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரி​யம் தரப்​பில் உயர் நீதிமன்றத்​தில் உடனடியாக மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மேல்​முறை​யீட்டு வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்​தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று பிற்​பகலில் விசாரணைக்கு எடுத்​துக் கொள்​ளப்பட்​டது.

அப்​போது மத்​திய தணி்க்கை வாரி​யம் தரப்​பில் காணொலி காட்சி வாயி​லாக ஆஜரான சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் நேரில் ஆஜரான கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ஏ.ஆர்​.எல்​.சுந்​தரேசன் ஆகியோர், ‘‘இந்த வழக்​கில் பதில்​மனு தாக்​கல் செய்ய தனி நீதிபதி எங்​களுக்கு எந்த அவகாச​மும் வழங்​க​வில்​லை. படத்தயாரிப்பு குழு, ஜன.6-ல் வழக்கை தாக்​கல் செய்​தனர். ஜன.7-ம் தேதி விசா​ரிக்​கப்​பட்​டது.

ஜன.9-ம் தேதி தீர்ப்​பளிக்​கப்​பட்​டுள்​ளது. தணிக்கை வாரியத்​தின் மறுஆய்வு உத்​தரவை ரத்து செய்ய வேண்டுமென படத்​த​யாரிப்பு குழு கோராத நிலை​யில், அந்த உத்​தரவை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவிட்டிருப்​பது ஏற்புடையதல்ல. எனவே இந்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்​டும். அது​வரை படத்தை வெளி​யிட தடை விதிக்க வேண்​டும்” என வாதிட்டனர்.

பதி​லுக்கு படத்​த​யாரிப்பு குழு தரப்​பில் காணொலி மூலமாக ஆஜரான மூத்த வழக்​கறிஞர் முகுல் ரோஹதகி மற்​றும் நேரில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் சதீஷ் பராசரன் ஆகியோர், இப்​படத்​துக்கு கடந்த டிச.22-ம் தேதி​யன்று ‘யு/ஏ’ சான்​றிதழ் வழங்க பரிந்துரை செய்​து​விட்​டு, அந்தக்குழுவில் உள்ள ஒரு உறுப்​பினர் மூல​மாக மறுஆய்வு செய்ய வேண்​டுமென கோரு​கின்​றனர்.

இப்​படத்​துக்கு தணிக்கை சான்​றிதழ் வழங்க மறுப்​ப​தில் உள்​நோக்​கம் உள்​ளது. உலகம் முழு​வதும் ஜன.9 அன்று இப்​படத்தை திரை​யிட திட்​ட​மிட்டு இருந்​தோம். தணிக்கை வாரி​யத்​தின் உத்​தர​வால் தற்​போது அது தடைபட்​டுள்​ளது. தனி நீதிபதி வழக்கை முழு​மை​யாக விசா​ரித்து அதன்​பிறகு​தான் தீர்ப்​பளித்​துள்​ளார் என்​றனர்.

அப்​போது குறுக்​கிட்ட தலைமை நீதிப​தி, தணிக்கை சான்றிதழ் பெறும் முன்​பாக ஜனநாயகன் படத்தை வெளியிட தேதி குறித்​தது எப்​படி என்​றும் குறிப்​பிட்ட தேதி​யில் படத்தை வெளி​யிட வேண்டுமென நீதி​மன்​றத்​துக்கு தேவையற்ற அழுத்​தமோ, நிர்பந்தமோ கொடுக்​கக்​கூ​டாது என்​றும், இந்த வழக்​கில் பதிலளிக்க தணிக்கை வாரியத்துக்கு போதிய காலஅவ​காசம் வழங்க வேண்டாமா? எனவும் கேள்வி எழுப்​பி​னார்.

பின்​னர் நீதிப​தி​கள், ஜனநாயகன் படத்தை வரும் ஜன.21-ம் தேதி வரை வெளி​யிடக்​கூ​டாது என இடைக்​காலத் தடைவிதித்​தனர். மேலும், இந்த விவ​காரம் தொடர்​பாக மத்திய தணிக்கை வாரி​யம் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை அன்​றைய தினத்​துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

இந்த உத்​தர​வின் மூலம் ஜனநாயகன் திரைப்​படம் பொங்கலுக்கு வெளி​யா​வ​தில் சிக்​கல் ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் இந்த உத்​தரவை எதிர்த்து படத்தயாரிப்பு குழு தரப்பில்​ உச்​ச நீதி​மன்​றத்​தில்​ மேல்முறையீடு செய்​யப்​பட​வுள்​ளது என்​பது குறிப்பிடத்தக்​கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here