தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.
இதற்கு உணவுத் துறை பி.வெங்கடரமணன், கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ், வேளாண்மை துறை அமைச்சர் ஆர்.வினோத் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் பு.உமாநாத், வேளாண்மை துறை செயலர் பொ.சங்கர், வேளாண்மைத் துறை இயக்குநர் க.வீ.முரளதரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதில், கொள்முதல் செய்த நெல்லை பாதுகாப்பாக சேமித்து உரிய காலக்கெடுவில் அரவைக்கு அனுப்புவது, நெல் மூட்டைகள் மழைநீரால் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கைப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கான நிலுவைத் தொகை ரூ.129.82 கோடியை உடனே விடுவிக்க தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு அலுவலரிடம் வலியுறுத்தப்பட்டது.
பசிபிக் பெருங்கடலில் உருவாகும் எல்-நினோ காலநிலை நிகழ்வு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மழைக் காலங்களில் தார்ப்பாலின் உறைகள், நைலான் ரோப் மூலம் மூட்டைகள் மழைநீரால் பாதிக்கப்படாதபடி பாதுகாக்க வேண்டும்.
நெல் மூட்டைகளின் ஈரப்பதம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தேவையான காற்றோட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அவசரகாலத் தேவைகளுக்கான உபகரணங்களைதயார் நிலையில் வைக்க வேண்டும்.
கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பத்தை நிர்ணயிக்கப்பட்ட அளவான 17 சதவீதத்துக்கும் குறைவாக இருக்குமாறு கண்காணிக்கவும், நெல் பதர்கள் தேங்காமல் உடனுக்குடன் அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க நேரிடும். கொள்முதல் நிலையங்கள், திறந்தவெளி சேமிப்பு மையங்களில் பராமரிப்பை மேம்படுத்தி, நெல் மூட்டைகள் பாதுகாப்பாக சேமிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக, கொள்முதல் நிலையங்களை மேடான பகுதிகளில் அமைத்து, மழைநீர் எளிதில் வடிந்துசெல்லும் வடிகால் வசதியுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
