டெல்லியில் முதல்வர் இல்லம் பல கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டது பற்றி விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் பர்வேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் பதவி வகித்தார். அப்போது, 6, பிளாக்ஸ்டாப் சாலையில் உள்ள அரசு இல்லத்தில் அவர் தங்கியிருந்தார். இந்த கட்டிடத்தை புதுப்பிக்க பல கோடி ரூபாயை செலவிட்டதாக புகார் எழுந்தது. பல்வேறு நவீன வசதிகள் கொண்ட இந்த இல்லத்தை பாஜகவினர் சீஷ் மகால் என குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. குறிப்பாக, புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட கேஜ்ரிவாலை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட பர்வேஷ் வர்மா வெற்றி பெற்றார். அவர் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.
இந்நிலையில் அமைச்சர் பர்வேஷ் வர்மா நேற்று கூறும்போது, “ஆம் ஆத்மி ஆட்சியின்போது, 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிநவீன வசதிகளுடன் முதல்வர் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டது. இதற்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டது. எந்த அடிப்படையில் அதிகாரிகள் இதுபோன்ற செலவுக்கு அனுமதி வழங்கினர் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். இதுபோல முதல்வர் இல்லத்தை புதுப்பிக்க எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்” என்றார்.














