2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 5 மடங்காகும்: சிஐஐ மற்றும் கேபிஎம்ஜி அறிக்கையில் தகவல்

0
112

இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 2047-ம் ஆண்டுக்குள் 5 மடங்காக அதிகரிக்கலாம். அப்போது ராணுவத்துக்கு செலுவு செய்வதில் 3-வது பெரிய நாடாக இந்தியா மாறும் என இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் உலகளாவிய ஆலோசனை நிறுவனத்தின் (கேபிஎம்ஜி) கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2024-25-ம் ஆண்டில் ரூ.1.6 லட்சம் கோடியாக உள்ளது. இது 20147-ம் ஆண்டில் ரூ.8.8 லட்சம் கோடியாக உயரும்.

இந்தியாவின் ராணுவ ஏற்றுமதி ரூ.30,000 கோடியாக உள்ளது. இது ரூ.2.8 லட்சம் கோடியாக உயரும். அப்போது ராணுவ தளவாட துறையில் உலகளாவிய விநியோகஸ்தராக இந்தியா இருக்கும்.

இந்தியாவின் ராணுவ பட்ஜெட் தற்போது 6.8 லட்சம் கோடியாக உள்ளது. இது 2047-ம் ஆண்டுக்குள் ரூ.31.7 லட்சம் கோடியாக உயரும். ராணுவத்துக்கு செலவிடுவதில் தற்போது 4-வது பெரிய நாடாக இருக்கும் இந்தியா, 3-வது பெரிய நாடாக உருவெடுக்கும்.

கட்டமைப்பு மற்றும் நவீன சாதனங்களுக்கு இந்தியா செலவிடும் நிதி 27 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயரும்.

பாதுகாப்பு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவு 4 சதவீதத்திலிருந்து 8 முதல் 10 சதவீதமாக அதிகரிக்கும்.

உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) ராணுவத்துறைக்கான பங்கு 2 சதவீதத்திலிருந்து 4 முதல் 5 சதவீதமாக அதிகரிக்கும்.

முக்கியமான ராணுவ தொழில்நுட்பங்களுக்கு இந்தியா தொடர்ந்து இறக்குமதியை சார்ந்து இருக்கும். சிக்கலான ராணுவ தளவாடங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கையாளும் நபர்களுக்கு பற்றாக்குறை உள்ளது.

எல்லைப் பிரச்சினைகள், பிராந்தியத்தில் நிலவும் பதற்றம், உலகளாவிய போட்டி நாடுகள் ஆகியவற்றால், அரசின் கவனம் நீண்டகால முதலீடுகளில் இருந்து, குறுகிய கால பதில் நடவடிக்கைகளுக்கு மாறலாம்.

அரசுத் துறை மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயல்படுவது முக்கியம். பாதுகாப்பு துறையில் தனியார் நிறுவனங்களை ஈர்க்க ஊக்கம் மற்றம் கொள்கையளவிலான ஆதரவு முக்கியம்.

வெளிநாடுகளுடனான தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அறிவுசார் சொத்து உரிமைகள் ஆகியவை உணர்வுபூர்வமான மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here