அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக 33 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மூதாட்டி ஹர்ஜித் கவுர் (73) கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான்பிரான்சிஸ்கோ அருகே ஈஸ்ட் பே பகுதி அமைந்துள்ளது. கடந்த 1992-ம் ஆண்டு இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து ஹர்ஜித் கவுர் தனது இரு மகன்களுடன் ஈஸ்ட் பே பகுதியில் குடியேறினார். சுமார் 33 ஆண்டுகளாக அவர் ஈஸ்ட் பே பகுதியில் வசித்து வருகிறார். அவரது இரு மகன்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகள், சட்டவிரோதமாக குடியேறியதாக ஹர்ஜித் கவுரை கைது செய்தனர். இதை எதிர்த்து சட்ட ரீதியாக போராட அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும், ஹர்ஜித் கவுரை விடுவிக்கக்கோரி 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அவரை மீண்டும் வீட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஈஸ்ட் பே பகுதி மக்கள் முழுவதும் ஹர்ஜித் கவுருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.