சிக்சர்கள் ஜாம்பவான்களான இந்திய டி20 அணி – எந்த அணியும் நெருங்க முடியாது – சுவையான தகவல்கள்!

0
15

அக்டோபர் 2023-க்குப் பிறகு இந்திய டி20 அணியின் வெற்றி உண்மையில் திகைப்பூட்டக்கூடியதாக உள்ளது. 48 வெற்றிகள். 8 போட்டிகளில் மட்டுமே தோல்விகள். அதே போல் எந்த அணியும் நெருங்க முடியாத அளவுக்கு இதே காலக்கட்டத்தில் 1081 சிக்சர்களை டி20-யில் அடித்துள்ளனர் இந்திய டி20 அணி வீரர்கள்.

இதனால்தான் 2026 டி20 உலகக்கோப்பையை 3வது முறையாக வெல்ல மிகச்சிறந்த வாய்ப்புள்ள அணி இந்திய அணியே. இதற்கு அடுத்த வாய்ப்பாகப் பேசப்படுவது ஆஸ்திரேலியா ஆனால் அவர்கள் 2023லிருந்து பார்த்தால் 28 வெற்றிகள் என்பதோடு 13 தோல்விகள் கண்டுள்ளனர்.

சமீபமாக இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் இத்தகைய ஆதிக்கம் செலுத்தி வருவது இந்திய அணியின் ‘பேங்.. பேங்’ காட்டடி சிக்சர்கள் விளாசும் பேட்டிங் வரிசையினால்தான் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இந்திய அணியின் டி20 ரன் ரேட் 9.69. இதிலும் எந்த அணியும் நெருங்க முடியவில்லை.

மேலும் 2023 அக்டோபர் தொடங்கி மொத்தம் 62 டி20 ஆட்டங்களில் இந்திய அணி 20 முறை 200+ ரன் எண்ணிக்கையை எடுத்து ஜாம்பவான் அணியாகத் திகழ்கிறது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் மே.இ.தீவுகள் கொஞ்சம் தள்ளி 61 போட்டிகளில் 13 முறை 200+ ரன் எண்ணிக்கையை எடுத்துள்ளனர். அடுத்த இடத்தில் நியூஸிலாந்து 51 ஆட்டங்களில் 200+ ரன் எண்ணிக்கையை 10 முறை எட்டியுள்ளனர்.

இங்கிலாந்து 38 போட்டிகளில் 6 முறையும், ஆஸ்திரேலியா 44 போட்டிகளில் 8 முறையும் தென் ஆப்பிரிக்கா 46 போட்டிகளில் 6 முறையும் பாகிஸ்தான் 68 போட்டிகளில் 6 முறையும் ஜிம்பாப்வே 63 போட்டிகளில் 10 முறையும் 200+ ரன் எண்ணிக்கையை எட்டியுள்ளனர்.

நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி சமீபமாக முடிந்த டி20 தொடரில் 5 போட்டிகளில் மூன்று முறை 200+ டோட்டலை எட்டியது. கடைசி போட்டியில் இஷான் கிஷன் காட்டடி தர்பாரில் 271 ரன்களை எட்டி சாதனை படைத்தது. இதோடு 3வது டி20-யில் 154 ரன்களை 10 ஓவர்களில் சேஸ் செய்து முடித்தது.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை ‘intimidating’ என்பார்களே அது போல் அபிஷேக் சர்மா, சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங் ஆகியோர் அதிரடி மன்னர்களாக உள்ளனர், அதுவும் இந்திய ஃபிளாட் பிட்ச்களில் இவர்கள் உலகக்கோப்பையிலும் தங்களது சரவெடி சிக்சர்களால் எதிரணியினரை நிச்சயம் ஓட ஓட விரட்டுவார்கள் போல்தான் தெரிகிறது.

2023 அக்டோபருக்கு பிறகு அடித்த 1081 சிக்சர்கள் எப்படி இந்திய அணி சாதித்தது எனில் ஒவ்வொரு 10 பந்துக்கும் ஒரு சிக்ஸ் என்ற வீதத்தில் அடித்துள்ளது .அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா 11 பந்துகளுக்கு ஒரு சிக்ஸ் என்ற வீதத்தில் அடித்துள்ளது.

ரிங்கு சிங்

இந்த சிக்சர் தர்பாரில் அபிஷேக் சர்மா 2023 அக்டோபருக்குப் பிறகே அனைத்து டி20களிலும் சேர்த்து 249 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஒவ்வொரு 6-7 பந்துகளுக்கும் ஒரு சிக்ஸ் என்ற வீதத்தில் வெளுத்துக் கட்டி வருகிறார். இவருக்கு அடுத்த படியாக இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே ஆகியோர் சிக்சர்கள் மன்னர்களாக திகழ்ந்து வருகின்றனர்.

இதில் அபிஷேக் ஏன் மிக மிக அபாயகரமானவர் எனில் ஒரு இன்னிங்சில் 10 அல்லது அதற்கும் கூடுதலாக சிக்சர்களை அடித்ததில் அபிஷேக் சர்மா 2023 அக்டோபருக்குப் பிறகே 4 முறை இப்படி ஆடியுள்ளார். திலக் வர்மா, இஷான் கிஷன் தலா இருமுறை 10+ சிக்சர்களை விளாசி அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

இதனால்தான் இந்திய அணியை இந்த 2026 உலகக்கோப்பையில் கட்டுப்படுத்துவதோ வெல்வதோ மிகமிகக் கடினமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here