சர்வதேச கால்பந்து களத்தில் இருந்து மீண்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்தியாவின் சுனில் சேத்ரி. கடந்த மார்ச் மாதம் தனது ஓய்வு முடிவுக்கு விடை கொடுத்துவிட்டு சுனில் சேத்ரி களம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை 2027-க்கான கடைசி தகுதி சுற்றில் இருந்து இந்தியா வெளியேறியது. இதையடுத்து ஓய்வு பெறுவதாக சுனில் சேத்ரி அறிவித்துள்ளார். கடந்த 2024-ல் அறிவித்த ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக்கொண்ட பின்னர் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடிய அவர், 6 போட்டிகளில் ஒரே ஒரு கோல் மட்டுமே பதிவு செய்தார்.
கடந்த அக்.14-ம் தேதி சிங்கப்பூர் அணிக்கு எதிராக இந்தியா விளையாடிய போட்டிதான் சுனில் சேத்ரியின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது.
41 வயதான சுனில் சேத்ரி, இந்திய அணிக்காக 157 போட்டிகளில் 95 கோல்கள் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்காக அதிக கோல்களை பதிவு செய்த வீரராக அவர் அறியப்படுகிறார். தொடர்ந்து கிளப் அளவிலான போட்டிகளில் அவர் விளையாடுவார். அதற்கு தகுந்த வகையில் அண்மையில் பெங்களூரு கால்பந்து கிளப் அணியுடன் அவர் ஒப்பந்தம் மேற்கொண்டார்.














