தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் கேசவ் மஹாராஜ், சைமன் ஹார்மர், செனுரன் முத்துசாமி, பிரேனலன் சுப்ராயன் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த சுழல் கூட்டணி சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 35 விக்கெட்களை வேட்டையாடி இருந்தது.
இவர்களின் சிறப்பான செயல் திறனால் 2 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 1-1 டிரா செய்திருந்தது. இதனால் இந்த சுழல் கூட்டணி சுழலுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் கொடுக்கக்கூடும் என கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான டென் டஸ்ஷேட் கூறியதாவது: தென் ஆப்பிரிக்க அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலும் 3 பேருடன் விளையாடுகிறார்கள். இது ஒரு துணைக்கண்ட அணிக்கு எதிராக விளையாடுவது போன்றது. அவர்கள் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களையும், 3 சுழற்பந்து வீச்சாளர்களையும் விளையாடும் லெவனில் சேர்ப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் துணைக்கண்டத்தில் விளையாடும்போது இது சவாலாக அமையும்.
இந்த விஷயத்தில் ஒரு அணியாக சிறப்பாகச் செயல்பட வேண்டும். இதை நாங்கள் ஆரம்பத்திலேயே சரி செய்து விட்டோம். சில முறை நாங்கள் தோல்வியடைந்துள்ளோம். எனவே இது ஒரு பெரிய சவால்தான். நியூஸிலாந்து அணிக்கு தொடரில் இருந்து எங்களது பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். சுழற்பந்து வீச்சை எப்படி விளையாடுவது என்பதற்கு எதிராக நாங்கள் சில திட்டங்களை வகுத்துள்ளோம். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இது மிகவும் முக்கியமானதாக இருக்கும். சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தனர்.
கடந்த 9 முதல் 10 மாதங்களில் தென் ஆப்பிரிக்க அணி அபாரமாக செயல்பட்டுள்ளது. அவர்கள் பாராட்ட தகுதியானவர்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அவர்கள் பெற்றுள்ள நிலை, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தரமான அணி என்பதை நிரூபித்தது. வலுவான சுழற்பந்து வீச்சை கொண்டுள்ள அந்த அணிக்கு எதிராக ஆட்டம் சொந்த மண்ணில் சுவாரசியத்தை மேலும் அதிகரிக்கும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மிகவும் முக்கியமானது. இதில் நீங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடிய அல்லது நழுவ விடக்கூடிய எந்தத் தொடரும் இல்லை. வெளிப்படையாக கூறவேண்டுமெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு நாங்கள் எடுத்து வைக்கும் மிகப்பெரிய படியாக இந்த தொடர் இருக்கும். அனைவரும் இந்த தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம். இது சிறந்த தொடராக இருக்கும். ஈடன் கார்டன் மைதான ஆடுகளம் பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது.
ஆட்டத்தின் பிற்பகுதியில் பந்துகள் சுழலும். தொடக்க நாட்களில் பேட்டிங் செய்ய சற்று எளிதாக இருக்கக்கூடும். இரு அணிகளிலும் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எனவே அணிச் சேர்க்கையை முடிவு செய்வதில் சவால் இருக்கும். முதல் இரண்டு நாட்களில் எங்கள் வேகப்பந்து வீச்சாளர்களை நம்பியிருப்போம்.
டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளத்தில் நாங்கள் விரும்புவது இதுதான். அப்போதுதான் சமநிலை இருக்கும். ஆனால் பிற்பகுதியில் சுழல் இங்கே முக்கியமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இவ்வாறு டென் டஸ்ஷேட் கூறினார்.














