மே.இ தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா: ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ், தொடர் நாயகன் ஜடேஜா

0
15

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.

டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று இந்த 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 81.5 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் பெற்றது. 2-வது இன்னிங்ஸில் அந்த அணி 118.5 ஓவர்களில் 390 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 25 ரன்களும், சாய் சுதர்சன் 30 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.

நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 35.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தனது 20-வது அரை சதத்தை கடந்த கே.எல்.ராகுல் 108பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 58 ரன்களும், துருவ் ஜூரெல் 6 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக சாய் சுதர்சன் 39, கேப்டன் ஷுப்மன் கில் 13 ரன்கள் எடுத்த நிலையில் ராஸ்டன் சேஸ் பந்தில் ஆட்டமிழந்தனர்.

7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது. அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

ஆட்ட நாயகனாக குல்தீப் யாதவ் தேர்வானார். அவர், முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களையும், 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தார். தொடர் நாயகனாக ரவீந்திர ஜடேஜா தேர்வானார். அவர், பேட்டிங்கில் ஒரு சதம் உட்பட 104 ரன்களும், பந்து வீச்சில் 8 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தார்.

27 வெற்றிகள்: 2002-ம் ஆண்டு முதல் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணி 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்திய அணி ஒரு டெஸ்டில் கூட தோல்வி அடையவில்லை. அதேநேரத்தில் 10 தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. கடைசியாக 2002-ல் தான் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிராக இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்டிருந்தது.

‘நம்பிக்கையை அதிகரிக்கும்’ – தோல்வி குறித்து மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ராஸ்டன் சேஸ் கூறும்போது, “இந்தப் போட்டியில் எங்களுக்குக் கிடைத்த நேர்மறையான விஷயங்கள் என்னவென்றால், கேம்பல் மற்றும் ஷாய் ஹோப் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். அவர்கள் எங்களுக்காகப் போராடினார்கள், நீண்ட காலத்திற்குப் பிறகு நாங்கள் 100 ஓவர்கள் வரைபேட் செய்தோம். ஆட்டத்தை 5-வது நாளுக்கு எடுத்துச் சென்றது மிகவும் சிறப்பாக இருந்தது. நாங்கள் எப்போதுமே 80 ஓவர்களுக்கு மேல் எப்படி பேட்டிங் செய்வது என்று விவாதிப்போம். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக பேட்டிங் செய்வது, ஸ்வீப் செய்வது, கால்களைப் பயன்படுத்துவது என பல யோசனைகளை நாங்கள் கொண்டு வந்தோம். அணியில் உள்ள வீரர்கள் கரீபியனில் சிறந்த வீரர்கள். கடைசி டெஸ்ட் போட்டியில் கிடைத்த நேர்மறையான விஷயங்களை வரவிருக்கும் தொடருக்குச் செல்ல ஒரு படிக்கல்லாகவும் நம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு வழியாகவும் பயன்படுத்துவோம். இங்கிருந்து முடிந்தவரை முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும்” என்றார்.

‘பொறுப்புகள் மிகவும் பிடிக்கும்’ – மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற பின்னர் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறும்போது, “ஆட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு சாத்தியமான முடிவை எடுக்க முயற்சிக்கிறேன். சில நேரங்களில் எந்த வீரரால் ரன்கள் எடுக்க முடியும் அல்லது விக்கெட்டுகளை வீழ்த்திகொடுக்க முடியும் என்பதைப் பொறுத்து தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். எனக்குப் பொறுப்புகள் பிடிக்கும். அதை என் வழியிலேயே செய்கிறேன். சில முக்கிய முடிவுகளை எடுப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, அது என்னுள் இருக்கும் சிறந்ததை வெளிக்கொண்டு வருகிறது. பாலோ-ஆன் கொடுத்த போது நாங்கள் சுமார் 300 ரன்கள் முன்னிலையில் இருந்தோம். ஆடுகளம் உயிர்ப்பிப்புடன் இல்லை. எனவே நாங்கள் 2-வது இன்னிங்ஸ் விளையாடி 500 ரன்கள் எடுத்தாலும், 5-வது நாளில் 6 அல்லது 7 விக்கெட்டுகளை எடுக்க வேண்டியிருந்தால் அது எங்களுக்கு கடினமான நாளாக இருக்கலாம் என்று நினைத்தோம். அதை நினைத்துதான் பாலோ-ஆன் முடிவை எடுத்திருந்தோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here