ஆசிய கோப்பை உலக ரேங்கிங் வில்வித்தை ஸ்டேஜ் 1 போட்டி தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவு அரை இறுதியில் சிக்கதா தனிபார்த்தி, ராஜ் கவுர், தேஜல் சால்வே ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 229-226 என்ற கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தியது.
இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணியானது போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள கஜகஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. ஆடவருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவு அரை இறுதியில் ரஜத் சவுகான், ரிஷப் யாதவ், உதய் கம்போஜ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 233-234 என்ற கணக்கில் வியட்நாம் அணியிடம் தோல்வி அடைந்தது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி 234-232 என்ற கணக்கில் பூட்டான் அணியை வீழ்த்தியது. ஆடவருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவு அரை இறுதியில் தேவாங் குப்தா, சுக்செயின் சிங், ஜூயல் சர்க்கார் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 5-1 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மகளிருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ரூமா பிஸ்வாஸ், கீர்த்தி, ரிதி போர் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 5-1 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.














