யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 44 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக முகமது ராயன் 35, அக்சத் ராய் 26, ஏத்தன் டிசோசா 17, உத்திஷ் சூரி 16 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் யுதாஜித் குகா 3 விக்கெட்களை வீழ்த்தினார். சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
138 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 16.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் எடுத்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி 46 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 76 ரன்களும், ஆயுஷ் மகத்ரே 51 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 67 ரன்களும் விளாசினர்.
இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதே பிரிவில் பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்களிலும் வெற்றி 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரை இறுதியில் நுழைந்தது. அரை இறுதி ஆட்டங்கள் நாளை (6-ம் தேதி) நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான், வங்கதேச அணியுடன் மோதுகிறது. இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.














