இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது டி 20 கிரிக்கெட் போட்டி கோல்ட் கோஸ்ட் நகரில் உள்ள கர்ராரா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. ஹோபர்ட்டில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
டி20 தொடர் 1-1 என சமநிலையில் இருக்கும் நிலையில் கோஸ்ட் நகரில் உள்ள கர்ராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் 4-வது ஆட்டத்தில் இரு அணிகளும் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் இரு போட்டிகளிலும் பந்துவீச்சில் அச்சுறுத்தல் கொடுத்த ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் கடந்த ஆட்டத்தில் இருந்து விலகினார். இது அந்த அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் 186 ரன்களை குவித்திருந்த போதிலும் ஆஸ்திரேலிய அணியால் வெற்றியை வசப்படுத்தப்படுத்த முடியாமல் போயியிருந்தது.
இதுஒருபுறம் இருக்க ஆஷஸ் தொடருக்கு தயாராகும் விதமாக இன்று நடைபெறும் டி 20 ஆட்டத்திலும், அடுத்த ஆட்டத்தில் இருந்தும் அதிரடி பேட்ஸ்மேனான டிராவிஸ் ஹெட் விலகியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் இரு தூண்களாக கருதப்படும் ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட் ஆகியோர் இல்லாததால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை பெறுவதற்காக சிறந்த வாய்ப்பு உருவாகி உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை வெல்வதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும். ஒருவேளை இன்று தோல்வியை சந்தித்தால் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்வதற்கோ அல்லது தொடரை பறிகொடுக்காமல் இருப்பதற்கோ போராட வேண்டிய நிலை ஏற்படும். 3-வது ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் 23 பந்துகளில், 49 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்திருந்தார்.
அதேவேளையில் தொடக்க வீரரான ஷுப்மன் கில், இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டி தொடர் உட்பட 6 ஆட்டங்களில் விளையாடிய போதிலும் ஒரு முறைகூட அரை சதத்தை எட்டவில்லை. அவர், முறையே 10, 9, 24, 37*, 5, 15 ரன்களே எடுத்துள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்தில் ஷுப்மன் கில் ரன்கள் குவிக்க வேண்டிய நெருக்கடியுடன் களமிறங்குகிறார். மறுபுறம் மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா சிறந்த பார்மில் உள்ளார். அவரிடம் இருந்து மீண்டும் ஒரு அதிரடி தொடக்கம் அமையக்கூடும். சூர்யகுமார் யாதவும் ரன்கள் குவிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.
பந்துவீச்சில் கடந்த ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அதேவேளையில் ஜஸ்பிரீத் பும்ரா விக்கெட் கைப்பற்றாவிட்டாலும் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியிருந்தார். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும். சுழலில் அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் கூட்டணி பலம் சேர்க்கக்கூடும்.
ஆஸ்திரேலிய பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ், டிம் டேவிட், மார்கஸ் ஸ்டாயினிஸ் ஆகியோரை பெரிதும் சார்ந்திருக்கக்கூடும். டிராவிஸ் ஹெட் இல்லாததால் மேத்யூ ஷார்ட் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது. பந்துவீச்சில் கடந்த ஆட்டத்தில் சீன் அபோட் 3.3 ஓவர்களில் 56 ரன்களை தாரைவார்த்திருந்தார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக பென் டுவார்ஷுயிஸ் அல்லது மஹ்லி பியர்ட்மேன் சேர்க்கப்படக்கூடும்.














