பெங்களூரு: இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
டாம் லேதம் தலைமை யிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்த தொடரின் முதல்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
மழை காரணமாக காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. ஒன்றரை மணி நேரம் தொடர்ச்சியாக மழை பெய்ததை தொடர்ந்து போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் மழை நின்றது. இதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி அளவில் போட்டி நடுவர்கள் ஆடுகளத்தை பார்வையிட்டனர். ஆனால் இரவிலும் மழை பெய்திருந்ததால் ஆடுகளத்தின் இருபுறமும் அதிக அளவிலான ஈரப்பதம் இருந்தது.
இதைத் தொடர்ந்து 2.34 மணி அளவில் முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். 2-வது நாளான இன்று காலை 8.45 அணிக்கு டாஸ் நிகழ்வு நடைபெறும் என்றும் போட்டி 9.15 மணிக்கு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பெங்களூரு பகுதியில் இன்று பகல் வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டமும் பெரிதளவு பாதிக்கப்படக்கூடும்.