சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் 2036-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்த விருப்பம் தெரிவித்து கடிதம் வழங்கியது இந்தியா

0
196

2036-ம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தும் ‘விருப்பக் கடிதத்தை’ சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் எதிர்கால போட்டியை நடத்தும் உரிமையை வழங்கும் கமிஷனிடம் இந்தியா சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடனான பல மாத முறைசாரா உரையாடலுக்குப் பிறகு ஒரு லட்சிய திட்டத்தில் முதல் உறுதியான நடவடிக்கையை இந்திய ஒலிம்பிக் சங்கம் எடுத்துள்ளது.

இந்த கடிதத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) கடந்த அக்டோபர் 1-ம்தேதி சமர்ப்பித்ததாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த மகத்தான வாய்ப்பின் மூலம் இந்தியாவுக்கான பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், இளைஞர் வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் பலன்கள் ஏற்படும் என விளையாட்டுத்துறை அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, 2036-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்துவதற்கான இந்திய அரசின் விருப்பத்தைப் பற்றி பேசியிருந்தார்.

அடுத்த ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அதற்கு முன்னர், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடு தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. ஒலிம்பிக் திருவிழாவை நடத்துவதற்கான உரிமையை பெறுவதற்கான போட்டியில் சவுதி அரேபியா, கத்தார், துருக்கி போன்ற வலுவான நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்த நாடுகளின் போட்டியை இந்தியா எதிர்கொள்ள வேண்டியது உள்ளது. இருப்பினும் ‘விருப்பக் கடிதத்தை’ சமர்ப்பித்துள்ளதன் மூலம் அடுத்த கட்டசெயல் முறைக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

இந்த கட்டத்தில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியானது போட்டியை நடத்தும் உரிமையை கோரும் நாடுகளில் விளையாட்டுகளுடன் தொடர்புடைய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு நடத்தும். இந்த செயல்திறன் மதிப்பீட்டின் ஒரு பகுதியாக சமூகப் பொறுப்புக்கான வணிகம் மற்றும் நிலைத்தன்மை, மனித உரிமைகள் மற்றும் போட்டியை நடத்துவதற்கான இடங்கள் ஆகியவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

அடுத்த கட்டமாக முறைப்படி ஏலம் கோருவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், இது எதிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமையை வழங்கும் கமிஷனால் மதிப்பீடு செய்யப்படும். இறுதியாக வாக்கெடுப்பு நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் நாடு 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமையை பெறும்.

இந்தியாவின் இந்த திட்டத்துக்கு தற்போதைய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் ஆதரவளித்துள்ளார்.

கடைசியாக 2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டி இந்தியாவில் நடைபெற்றிருந்தது. ஆனால் 2036-ம் ஆண்டு ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை, அகமதாபாத் போட்டியை நடத்தும் நகரமாக முன்னணியில் உள்ளது.

2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா பெறும் பட்சத்தில் கோ கோ, கபடி, செஸ், டி20 கிரிக்கெட், ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகள் சேர்ப்பதில் ஆர்வம் காட்டக்கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here