இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 142 ரன்களில் வீழ்த்தியது இந்தியா. இதன் மூலம் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து இந்தியா வென்றுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 4-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் இந்தியா வென்றது. ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீசியது. முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 356 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் ஷுப்மன் கில் 112 ரன்கள், விராட் கோலி 52 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 78 ரன்கள், கே.எல்.ராகுல் 40 ரன்கள் எடுத்திருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ரஷீத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது.
முதல் விக்கெட்டுக்கு பென் டக்கெட் மற்றும் பிலிப் சால்ட் 60 ரன்கள் சேர்த்தனர். டக்கெட் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சால்ட் 23, டாம் 38, ஜோ ரூட் 24, ஹாரி புரூக் 19, கேப்டன் பட்லர் 6, லிவிங்ஸ்டன் 9, அட்கின்சன் 38, ரஷீத் 0, மார்க் வுட் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 34.2 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்தியா 142 ரன்களில் வெற்றி பெற்றது. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களில் இந்தியா பதிவு செய்துள்ள வெற்றிகளில் இந்தப் போட்டி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அக்சர் படேல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். குல்தீப் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் கில் வென்றார். அடுத்ததாக இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது.














