தமிழகத்தில் சென்னை, புதுக்கோட்டை, சிதம்பரத்தில் தலா ஓர் அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றன. இவை தவிர அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட, தாலுகா, மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவப் பிரிவுகள் உள்ளன.
மொத்தம் 565 அரசு பல் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் 400-க்கும் மேற்பட்ட பல் மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். சிறப்பு தேர்வு மூலம் பணிநிரந்தரம் செய்யப்படாததால், அவர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
மற்றொரு புறம், அரசு பல் மருத்துவர்களுக்கு 2014 முதல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படவில்லை. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 துறைகளுக்கு மட்டும் 2023 வரை மட்டும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஏராளமான உதவி, இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல் மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதிதாக பல் மருத்துவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை.
கீழ்ப்பாக்கம், தருமபுரி, சிவகங்கை உள்ளிட்ட 5 அரசு மருத்துவக் கல்லூரிகளிலிருந்து 5 பல் மருத்துவர்கள் மீள் பணி நியமனம் மூலம் தாம்பரம் சாட்டிலைட் பல் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பல் மருத்துவத் துறை மூடப்பட்டுள்ளது.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பணியிடங்கள் குறைப்பு, புதிய நியமனங்கள் இல்லாததால் பல் மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனால் நோயாளிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது: அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ள நிலையில், பல் மருத்துவர் பணியிடங்களை குறைப்பது எந்த வகையில் நியாயம்.
அதேபோல், அரசாணை 293 மூலம் தரப்படும் ஊதியப் படிகள் இதுவரை பல் மருத்துவர்களுக்கு மட்டும் தரப்படவில்லை. ஏற்கெனவே நாட்டிலேயே தமிழகத்தில்தான் அரசு மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்களுக்கு மிகவும் குறைவான ஊதியம் தரப்படுகிறது.
அரசு பல் மருத்துவர்கள் பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்வதை ரத்து செய்ய வேண்டும். பல் மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும்.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிய பணியிடங்களில் பல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உட்பட குறைக்கப்பட்ட பல் மருத்துவர் பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும்.
அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 293-ன் மூலம் தரப்பட்ட ஊதியப்படிகளை அனைத்து பல் மருத்துவர்களுக்கும் வழங்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவர்கள் பணியிடங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.














