பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள், 11 தொகுதிகளில் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் 2-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ம் தேதியுடன் முடிந்தது. அப்போது, 11 தொகுதிகளில் இண்டியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் இண்டியா கூட்டணிக்குள் மோதல் அதிகரித்துள்ளது. அத்துடன் வாக்காளர்கள் மத்தியிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இண்டியா கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி ஆர்ஜேடி 4 தொகுதிகளில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடுகிறது. அதேபோல் விஐபி (விகாஸ்ஷீல் இன்சான்) கட்சியை எதிர்த்து 3 தொகுதிகளில் ஆர்ஜேடி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதேபோல் சிபிஐ கட்சியை எதிர்த்து 4 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
வைஷாலி, சிக்கந்தரா, ககல்காவ்ன், நர்கடியாகஞ்ச், ராஜாபகர், பச்வாரா,பிஹார்ஷெரீப், கர்கஹார், சைன்பூர், பாபுபர்ஹி, கவுரா பவுரா ஆகிய 11 தொகுதிகளில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிட உள்ளனர். எனினும், வேட்பு மனு வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்பதால், இந்த தொகுதிகளில் சிலர் வேட்பு மனுவை வாபஸ் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது கட்டத் தேர்தல் பிரச்சாரத்துக்கு 15 நாட்களுக்கு குறைவாகவே உள்ள நிலையில், இண்டியா கூட்டணி கட்சிகளின் பிரச்சாரத்தில் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்காமல் உள்ளனர்.