உடல் குறித்து நிருபர் ஒருவர் கேட்ட அநாகரிகமான கேள்விக்கு நடிகை கவுரி கிஷன் காட்டமாக பதிலளித்துள்ளார்.
புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘அதர்ஸ்’. மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (நவ.06) சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். இப்படம் தொடர்பான முந்தைய நிகழ்வு ஒன்றில் நிருபர் ஒருவர் ‘உங்கள் எடை என்ன?’ என்று அநாகரிகமான முறையில் நடிகை கவுரி கிஷனிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.
அது குறித்து தற்போது கேள்வி எழுப்பிய கவுரி கிஷனுக்கும் அந்த நிருபருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய கவுரி கிஷன், “என்னுடைய உடல் எடையை தெரிந்துகொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அன்று நீங்கள் அந்த கேள்வியை கேட்டபோது அதனை உள்வாங்கிக் கொள்ளவே எனக்கு நேரம் எடுத்தது. அதனால் அப்போது என்னால் அதுகுறித்து எதுவும் பேசமுடியவில்லை? ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர் உடல் மீதான உரிமை அவருக்கு உண்டு. என்னுடைய பிரச்சினை என்னவென்று உங்களுக்கு எப்படி தெரியும்?
நீங்கள் உருவகேலி செய்வது தவறு. இந்த படத்துக்கும் நீங்கள் கேட்கும் கேள்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் குண்டாக இருப்பதும், 80 கிலோ இருப்பதும் என்னுடைய சாய்ஸ். நான் என்னுடைய திறமையைதான் பேசவைப்பேன். நான் இங்கு இருக்கும் அனைத்து ஊடகத்தினரிடமும் கேட்டுக் கொள்கிறேன், உருவகேலியை இயல்பான விஷயமாக ஆக்காதீர்கள். இதே கேள்வியை ஒரு ஹீரோவிடம் கேட்பீர்களா? இது ஒன்றும் நகைச்சுவை இல்லை. இந்த படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் குறித்து எதுவும் கேட்கவில்லை. படம் குறித்து கேட்கவில்லை.ஆனால் இவ்வளவு முட்டாள்தனமான கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். நீங்கள் செய்வது பத்திரிகை தொழிலே அல்ல” இவ்வாறு கவுரி கிஷன் தெரிவித்தார்.














