Home தேசிய செய்திகள் பிஹார் அரசியலில் பாஜகவுக்கு முக்கியத்துவம்: நிதிஷ் கட்சியில் ‘பிளவு’ – நடப்பது என்ன?

பிஹார் அரசியலில் பாஜகவுக்கு முக்கியத்துவம்: நிதிஷ் கட்சியில் ‘பிளவு’ – நடப்பது என்ன?

0

மாநிலங்களவை உறுப்பினராகும் முதல்வர் நிதிஷ் குமாரால் பிஹார் அரசியலில் பாஜக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதையொட்டி நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியினர் ஆதரவு, எதிர்ப்பு என இரு வேறு கருத்துகளுடன் பிளவுபட்டுள்ளனர்.

பிஹாரில் 10-வது முறை முதல்வராக சுமார் 20 வருடங்களாகத் தொடர்கிறார் ஜேடியுவின் தலைவரான நிதிஷ் குமார். தற்போது அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக செல்வது பிஹார் அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம், பிஹார் அரசியலின் சமநிலை மாறி பாஜக முக்கியத்துவம் பெற வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. எனவே, பிஹாரின் மாற்றத்துக்கு ஜேடியுவினர் இடையே ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என அவர்களால் நம்பமுடியவில்லை. முதல்வர் நிதிஷின் இந்த சொந்த முடிவின் மீது அவரது கட்சியினர் இரு வேறு கருத்துக்களை வெளிப்படுத்தத் துவங்கி உள்ளனர்.

இது பற்றி ஜேடியுவின் பிஹார் மாநிலத் தலைவர் ரஞ்சன் பட்டேல் கூறுகையில், “எனக்கு அழுவதைத் தவிர வேறு வழியில்லை. நிதிஷ் குமாரை முதல்வராக்க நாங்கள் தடியடி, உதை, குத்துகளைத் தாங்கினோம்.

2025-ம் ஆண்டில், நிதிஷ் குமாருக்கு வாக்குகள் கேட்க வீடு வீடாகச் சென்றோம். அவர் இனி முதல்வர் இல்லை எனில், பிஹார்வாசிகள் எங்கே போவார்கள்? யாராவது முதல்வரை மாற்றும் சக்தி தங்களுக்கு இருப்பதாக நம்பினால், அவர்கள் தேர்தலை நடத்தி பெரும்பான்மையை பெறலாமே” எனப் புலம்புகிறார்.

இந்தப் பிரச்சனையில் ஜேடியுவின் முக்கிய மூத்தத் தலைவர்களான விஜய் சவுத்ரி, லல்லன் சிங் மற்றும் சஞ்சய் ஜா மீது புகார் கூறப்படுகிறது. ஏனெனில், இந்த மூவரின் தலைமையில் பல ஜேடியுவினர் நிதிஷ் முடிவை ஆதரித்து பேசி வருகின்றனர். இதனால், இந்த மூவரும் கட்சியை அழிப்பதாகக் கூறி ஜேடியுவின் எம்எல்சியான சஞ்சய் காந்தியும், நிதிஷ் குமாரின் மாநிலங்களவைத் தேர்தலுக்கு ஆதரவளிக்கவில்லை.

இதுபோன்ற நிலையின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. நிதிஷின் முடிவால், ஜேடியுவின் பல தலைவர்களும், தொண்டர்களும் தங்கள் அரசியல் எதிர்காலத்திற்கும், அரசியல் வாழ்க்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் எனக் கருதுகின்றனர்.

பிஹாரின் அதிகார மாற்றம் ஜேடியுவின் அரசியல் செல்வாக்கை பலவீனப்படுத்தி, பாஜகவை வலுப்படுத்தும் எனவும் ஒரு கருத்து உருவாகி வருகிறது. ஏனெனில், ஜேடியுவின் முழு அரசியல் களமும் நிதிஷ் குமாரைச் சுற்றியே சுழல்கிறது.

பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் அளவிற்கு அவரது கட்சிக்குள் வேறு எந்த தலைவரும் இல்லை. இதன் காரணமாக, நிதிஷ் டெல்லிக்குச் சென்றால், ஜேடியு தனது உறுதியான வாக்கு வங்கியின் திறனை இழக்கும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

நிதிஷின் மகன் நிஷாந்த் குமார் துணை முதல்வராக அமர்த்தப்படுவது பெயரளவிற்கே இருக்கும் எனவும் கருதப்படுகிறது.

இறுதியில் ஜேடியுவின் எம்எல்ஏக்களில் பலரும் ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அக்கட்சியின் தலைவர்கள் அஞ்சுகிறார்கள்.

இந்த பெரியக் கட்சிகளில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் பாஜக உள்ளன. மேலும், ஜேடியுவின் தலைவரான நிதிஷ் குமார் கூட்டணி அரசியலில் வல்லுநராகக் கருதப்படுகிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியாக இருந்தாலும் சரி, மெகா கூட்டணியாக இருந்தாலும் சரி, நிதிஷ் இல்லாமல் கூட்டணியில் ஜேடியுவின் பேரம் பேசும் சக்தி பூஜ்ஜியமாகி விடும் எனக் கருதப்படுகிறது.

நிதிஷ் இல்லாத ஜேடியுவிற்கு பாஜக அல்லது ஆர்ஜேடி ஆதரவளிக்காது என்பதால், பிஹாரின் அரசியல் சமநிலை மாறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

பிஹார் சட்டப்பேரவையின் 243 தொகுதிகளில் சரிநிகர் எண்ணிக்கையில் ஜேடியு மற்றும் பாஜக போட்டியிட்டன. முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் மீண்டும் முன்னிறுத்தப்பட்டார். இதில், ஜேடியுவை விட 4 தொகுதிகளில் பாஜக (மொத்தம் 89) வெற்றி பெற்றது. ஆர்ஜேடி தலைமையிலான எதிர்கட்சிகளின் மெகா கூட்டணி 35 தொகுதிகள் பெற்றிருப்பது நினைவுகூரத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version