“அதிகம் பேசப் போவதில்லை!” – ‘குபேரா’ வெற்றி விழாவில் தனுஷ்

0
163

தனுஷ் நடித்த ‘குபேரா’ படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதில் தனுஷ் பேசியது: “இப்போதெல்லாம் திரைப்படங்கள் தியேட்டரில் ஓடுவதே மெல்ல கேள்விக் குறியாகி வருகிறது. ரத்தம், கத்தி, ஹெலிகாப்டர்கள் இடம்பெறும் ஆக்‌ஷன் படங்கள் மட்டுமே மக்களை தியேட்டர்களுக்கு அழைத்து வரும் என்ற மாயை நிலவுகிறது. ஆனால் மனித உணர்வுகளும் மக்களை தியேட்டருக்கு அழைத்து வரும் என்ற நம்பிக்கையை ‘குபேரா’ விதைத்துள்ளது. மனித உணர்வுகளை விட பெரியது எதுவும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. எதிர்கால இயக்குநர்களுக்கும் இதுபோன்ற படங்கள் நம்பிக்கையை விதைக்க வேண்டும்.

பெரிய பட்ஜெட், கிராபிக்ஸ், சூப்பர் ஹீரோ படங்கள்தான் இனி கைகொடுக்கும் என்ற எண்ணம் அடுத்த தலைமுறை இயக்குநர்களுக்கு வரக் கூடாது. தமிழில் கூட இதேபோல ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது. சாதாரண மனிதர்களை பற்றி பேசிய அந்தப் படமும் மக்களை திரையரங்குகளுக்கு இழுத்து வந்தது.

வெற்றி கிடைக்கும்போது குறைவாக பேசவேண்டும் என்று என் அம்மா கூறினார். எனவே நான் இனி அதிகம் பேசப் போவதில்லை. குறைவாகத்தான் பேசப் போகிறேன். நமது ஆசிர்வாதங்களை கணக்கில் கொள்வதும் மிக முக்கியம் என்று என் அப்பா சொல்வார். தயாரிப்பாளரின் முகத்தில் சிரிப்பை காண்பதும் மிக முக்கியம் என்று சொல்வார். என் தயாரிப்பாளரின் முகத்தில் சிரிப்பை பார்ப்பதில் மகிழ்ச்சி” என்று தனுஷ் தெரிவித்தார்.

சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘குபேரா’. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு தமிழில் கலவையான விமர்சனங்களும், தெலுங்கில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here