சட்டவிரோத சூதாட்ட செயலிகளை தடை செய்வது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் சட்டவிரோத சூதாட்ட செயலிகளுக்கு தடை கோரி பொது நலன் மனுவை (பிஐஎல்) தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:
நாட்டில் ஏராளமான சட்டவிரோத சூதாட்ட செயலிகள் செயல்பட்டு வருகின்றன. செல்போன் வழியாக செயல்படும் இந்த அனைத்து பெட்டிங் செயலிகளும் சூதாட்ட சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை, குறிப்பாக, 1867-ம் ஆண்டின் பொது சூதாட்டச் சட்டத்தை நேரடியாக மீறுவதாக உள்ளன. இது போதைப்பொருளாக மாறிவிட்டது. எளிதில் பணம் சம்பாதிக்கும் வழிமுறையை ஊக்குவிப்பதன் மூலம் தனிநபர்களுக்கும் சமூகத்துக்கும் தீங்கு விளைவிக்கிறது. மேலும், இது நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கிறது.
எனவே, கோடிக்கணக்கான நாட்டு மக்களை பாதுகாக்கவும், இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றவும் இதுபோன்ற செயலிகளை தடை செய்ய உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.